Sunday, July 31, 2011

உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல்: தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கண்டனம்


யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் (வயது59) கடமை முடிந்து செல்லும்போது இனம்தெரியாத நபர்களினால் அவரது வீட்டுக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டமை கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடந்து மறுக்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதாக இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஆறு நாட்களுக்குள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை பல சந்தேகங்களை தோற்று வித்துள்ளதாகவும் ஒன்றியத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்றியத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
யுத்தத்துக்கு பின்னரான காலகட்டங்களில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திரம், ஊடக ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் ஊடகவியலாளர்கள் மீது அச்சறுத்தல் கொலை மிரட்டல் மற்றும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. ஊடகவியலாளர்கள் மீதான எந்த ஒரு தாக்குதல்கள் தொடர்பாகவும் இதுவரை பொலிஸார் உரிய விசாரணை நடத்தவில்லை.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் நிறுத்தப்படவும் இல்லை. சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் நேர்மையான முறையில் பொலிஸார் விசாரணை நடத்தவில்லை. உதயன் நாளேட்டின் செய்தியாளர் செ.கவிகரன் கடந்த மே மாதம் 28ஆம் திகதி இனம்தெரியாத குழுக்களினால் தாக்கப்பட்டிருந்தார். ஆனால் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழ் ஊடகத்துறை எவ்வாறான அச்சறுத்தல்களை எதிர்நோக்கி இருந்ததோ அவ்வாறான பிரச்சினைகள் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தொடருவதாக ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஜனநாயக சூழல் நிலவுவதை விரும்பாத படைத்தரப்பு இராணுவ நிர்வாகத்தை தொடருகின்றது என்ற தொனியில் தமிழ் ஊடகங்கள் செய்திகளையும் செய்தி விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றன.
உண்மை நிலைமைகளை அல்லது மக்களின் பிரச்சினைகளை வெளியே கொண்டு வருவது ஊடகங்களின் கடமை. அது ஊடகங்களின் ஜனநாயக உரிமை. அதனை கட்டுப்படுத்த எந்த ஒரு ஜனநாயக அரசுகளுக்கும்கூட உரிமை இல்லாத நிலையில் படைகளின் உதவியுடன் செயற்படுவதாக கூறப்படும் ஆயுதக்குழுக்கள் எவ்வாறு சட்டத்தை கையில் எடுக்க முடியும் எனவும் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே ஊடகத்துறை அமைச்சின் மீது தமிழ் ஊடகவியலாளர்கள் நம்பிக்கை வைக்கவேண்டுமானால், அரசாங்கம் கூறுகின்ற ஊடகஜனநாயகம் உண்மையானால்; குகநாதன் மீதான தாக்குதலுடன் தொடர்புள்ள நபர்கள் அல்லது குழக்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தன்டனை வழங்கப்பட வேண்டும் என ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

No comments:

Post a Comment