Saturday, July 02, 2011

நளினியை பயன்படுத்தி மஹிந்தவை அச்சுறுத்திய இந்திய அரசு!

இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டு இருப்பவர்களில் ஒருவரான நளினியை வேலூர்ச் சிறையில் 2008 ஆம் ஆண்டு ராஜிவ் காந்தியின் புதல்வியான பிரியங்கா காந்தி நேரில் வந்து சந்தித்து உரையாடியமை இந்திய அரசினால் திட்டமிடப்பட்ட ஒரு இராஜதந்திர நடவடிக்கை என்று நளினியின் கணவர் முருகன் தெரிவித்தார்.

நளினிக்கும் பிரியங்காவுக்கும் இடையில் இடம்பெற்ற அச்சந்திப்பை ஊடகங்கள் முன்னுரிமைப்படுத்திப் பிரசுரித்து இருந்தன. தந்தையைப் படுகொலை செய்தவர்களை பிரியங்கா மன்னித்து விட்டார் என்று எழுதி இருந்தன.



ஆனால் நளினியை பிரியங்கா நேரில் வந்து சந்தித்துப் பேசியமை ஒரு நாடகம் என்றும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் இலங்கை மிக நெருக்கமாகிக் கொண்டு வந்ததால் பீதி அடைந்த இந்தியா இலங்கையை வசப்படுத்துவதற்காக கையாண்ட இராஜதந்திரம்தான் அச்சந்திப்பு என்றும் கூறி உள்ளார் முருகன்.

சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கை நெருங்கிப் பழகுவது இந்தியாவுக்கு பிடிக்கவில்லை, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இலங்கைக்கு நிதி வழங்கி வந்திருக்கின்றன.

அதே நேரம் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வந்திருக்கின்றன; கோபம் அடைந்த இந்தியா நளினி - பிரியங்கா சந்திப்பின் மூலம் இலங்கைக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்தது.

இந்தியாவுக்கு எதிராக இலங்கை செயல்பட்டால் பாரதூரமான விளைவுகளை இலங்கை சந்திக்க நேரும் - இலங்கையின் எதிரிகளை இந்தியா வளர்த்து எடுக்கும் என்பதோடு ராஜிவ் காந்தி கொலைகூட தடையாக இருந்து விடாது என்பதே இந்தியா வழங்கிய எச்சரிக்கை என்று முருகன் குறிப்பிட்டார்.

நளினியைப் பகடைக் காய் ஆக்கி மஹிந்த அரசை இந்தியா அச்சுறுத்தியது என்றார் முருகன்.

No comments:

Post a Comment