Thursday, August 25, 2011

பத்மநாபசுவாமி கோயிலில் ரகசிய அறைகள் ஏற்கனவே 2 முறை திறக்கப்பட்டுள்ளது

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ரகசிய அறைகளை இதற்கு முன்பே 2 முறை திறந்து போட்டோ, வீடியோ எடுத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6 ரகசிய  அறைகளில், 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் கிடைத்தன.


‘பி’ என்ற கடைசி அறையை திறந்தால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என தேவபிரசன்னத்தில் கூறப்பட்டதால், அந்த அறையை திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்களை மதிப்பிடக் கூடாது, நகைகளை புகைப்படமோ, வீடியோவோ எடுக்கக் கூடாது என்றும் பிரசன்னத்தில் கூறப்பட்டது.

இந்த நிலையில், ரகசிய அறைகளில் கிடைத்த பொக்கிஷங்களை மதிப்பிட, உச்ச நீதிமன்றம் குழு அமைத்துள்ளது. அதே நேரம், கடைசி அறையை திறக்க தடை விதிக்கும்படி திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனால், பொக்கிஷங்களை மதிப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு முன்பும் 2 முறை பாதாள அறைகளை திறந்து நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி ரகசிய அறைகளை திறந்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்போதைய கோயில் நிர்வாக அதிகாரி சார்பில் ஒரு சுற்றறிக்கை கோயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

அதில், ‘திருவிதாங்கூர் மன்னர் ஆணையின்படி ரகசிய அறைகளில் வைக்கப்பட்டுள்ள தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்களை புகைப்படம் எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டியுள்ளது. எனவே, 3.8.2007 அன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு ரகசிய அறைகள் திறக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் நகல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில், 2007ல் ரகசிய அறைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மறைந்த சுந்தர்ராஜ் அய்யர் பொதுநலன் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையின் போது மன்னர் குடும்பம் சார்பில் ஆஜரான கோயில் நிர்வாக அதிகாரி, ‘பராமரிப்பு பணிக்காக 2002 ஏப்ரல் 17ம் தேதியும் ரகசிய அறைகள் திறக்கப்பட்டன. தற்போது புகைப்படம் எடுப்பதற்காக மீண்டும் அந்த அறைகள் திறக்கப்பட்டுள்ளன’ என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து. பாதாள அறைகளை பூட்டி சீல் வைக்கும்படி திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், 28 நாட்களுக்கு பிறகே அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், 2002ம் ஆண்டுக்கு பிறகே கோயில் ஒற்றைக்கல் மண்டபத்தில் தங்க முலாம் பூசப்பட்டது. இது தவிர கோயிலின் சில பகுதிகளில் வெள்ளி முலாமும் பூசப்பட்டது. இதற்கான தங்கமும், வெள்ளியும் ரகசிய அறைகளில் இருந்தது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், ரகசிய அறைகளை திறந்தால் வம்சமே அழியும் என்று தேவபிரசன்னத்தில் கூறப்பட்டது. ஏற்கனவே, பலமுறை அறைகளை திறந்து நகைகளை புகைப்படம் எடுத்த யாருக்கும் இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. எனவே, அறைகளை மீண்டும் திறந்து பரிசோதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment