இலங்கைப்
போரின் போது இடம்பெற்ற மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில்
விசாரணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு கனடா அழுத்தம்
கொடுக்க வேண்டும் என கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற
உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் வலியுறுத்தியிருக்கின்றார்.
இலங்கைப் போரின் இறுதிக்காலத்தில்
இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்காக இவ்வாறான
விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. நிபுகுணர்குழு ஏற்கனவே
தெரிவித்திருந்தது. "இரு தரப்பினரும் தமது நடவடிக்கைகளுக்கும், நீதியற்ற
செயற்பாடுகளுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடமைப்பாட்டைக்
கொண்டுள்ளார்கள்" எனவும் ராதிகா சிற்சபேசன் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலங்கையில் நீதியையும், உண்மையையும்,
பொறுப்புக்கூறும் கடமைப்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்காக சுயாதீனமான,
சர்வதேச, பக்கச்சார்பற்ற பொறிமுறை ஒன்றை ஐ.நா. சபை உருவாக்க வேண்டும் என
அழுத்தம் கொடுக்குமாறு புதிய ஜனநாயகக் கட்சி, கனடிய அரசாங்கத்தைக்
கேட்டுக்கொண்டிருப்பதாக அக்கட்சியின் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான
Wayne Marston தெரிவித்தார்.
2009 இல் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்
போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என கனடாவிலுள்ள சர்வதேச
மன்னிப்புச் சபையின் பிரதிநிதி அலெக்ஸ் நீவ் தெரிவித்தார். "பரந்தளவில்
போர்க் குற்றங்களும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களும் இரண்டு
தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன" எனத் தெரிவித்த அவர், "இங்கு நீதி
நிலைநாட்டப்படவேண்டும்" எனவும் வலியுறுத்தினார்.
"இலங்கை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும்
நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு ஒன்றை நியமித்தது. ஆனால், அவற்றினால் தேவையை
நிறைவேற்றமுடியாமல் தோல்வியடைந்தன. அரசாங்கம் தன்னுடைய பொறுப்பை
ஏற்றுக்கொள்வதற்கு மறுத்துவிட்டது" எனவும் குறிப்பிட்ட அலெக்ஸ், "கடந்த
காலங்களில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்களின் போதும் நீதி
நிலைநாட்டப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment