சட்டசபையில், கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்: ஆறுமுகம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: கடந்த தி.மு.க., ஆட்சியில், திரைப்படத் துறையினர் கடும் நெருக்கடியை சந்தித்தனர். தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு, அடிமாட்டு விலைக்கு திரைப்படங்களை வாங்கி வெளியிட்டனர். ஜனநாயக முறையில் திரைப்படத் துறையினரை பாதுகாக்கும் நடவடிக்கை அரசு எடுக்குமா?
கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: கடந்த ஆட்சியாளர்கள் நில மோசடியில் ஈடுபட்டது போலவே, திரைப்படத் துறையிலும் தங்களது குடும்ப ஆதிக்கத்தை விரிவுபடுத்தினர். திரைப்படத் துறையில் நடந்த தவறுகளை அரசு வெளிக்கொண்டு வருமா?
அமைச்சர் செந்தமிழன்: தனியார் தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிடுவது, அரசின் கட்டுப்பாட்டில் நேரிடையாக இல்லை. தனியார் தயாரிக்கும் திரைப்படங்கள் பற்றியோ, படம் தயாரிக்கப்பட்டு திரைக்கு வராமல் இருப்பது பற்றியோ, எவ்வித தகவலும் இத்துறையால் பெறப்படவில்லை. கடந்த தி.மு.க., ஆட்சியில், திரைப்படத் துறையினர் எப்படி எல்லாம் அல்லல்பட்டனர், துன்பப்பட்டனர் என, உறுப்பினர்கள் தெரிவித்தது நூற்றுக்கு நூறு உண்மை.
திரைப்படத் துறையே தங்களது கையில் இருக்க வேண்டும்; யாரும் படங்களை தயாரிக்கக் கூடாது; அப்படியே தயாரித்தாலும் திரையிடக் கூடாது என்று, அறிவிக்கப்படாத கட்டுப்பாட்டை, தமிழகம் முழுவதும் வைத்திருந்தனர்.
தமிழ், தமிழ் என்று சொல்லி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கருணாநிதி, தன் குடும்பத்தினரின் சினிமா கம்பெனிக்கு, "ரெட்ஜெயன்ட், கிளவுடு நைன்' என, ஆங்கில பெயரை சூட்டியிருப்பது தான், தமிழ் மீது வைத்திருக்கும் பற்றா? கடந்த ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியினராக இருந்த போது, சட்டசபையில் இதைப் பற்றி பேசினோம். அவை அத்தனையும், செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருந்தது.
திரைப்படத் துறையினரின் நலன்களைக் காக்கும் வகையில், சின்னத் திரையினரையும் சேர்த்து, திரைப்படத் துறையினர் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, "ரூல் அன்ட் லா' என்ற சட்டத்தின் ஆட்சி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடக்கிறது. 100 நாட்கள் சாதனையை 100 ஆண்டு கால சாதனையை நிகழ்த்தி வரும் முதல்வர், திரைப்படத் துறையினருடன் சேர்ந்து, அவர்களின் நலன் காப்பார். இவ்வாறு விவாதம் நடந்தது.
No comments:
Post a Comment