Thursday, August 04, 2011

மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி, சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று.

மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி, சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று.புனிதர்களின் நினைவுகளைக் காப்போம் வாரீர்.! மாவீரர் நினைவு இனவிடுதலைக்கு உந்துசக்தி தருவதேயன்றி.சிலரின் இருப்பை காப்பதற்கானதன்று. மாவீரர்கள் புனிதமானவர்கள். தமிழினம், தமிழ்மொழி, தாய்நிலம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம்செய்த உன்னதமானவர்கள். மாசுமறுவற்ற மண்ணின் மைந்தர்கள். விடுதலை என்ற இலட்சியக்கனவோடு தாய்மடியில் வீரவிதையாய்ப் புதைந்திருப்பவர்கள். அவர்களின் நினைவுகள் புனிதமானவை. பரிசுத்தமானவை.


எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் உந்துசக்தியாக, தமிழர் மனங்களில் புத்தொளி பாய்ச்சி, புதுவிசை கொடுக்கும் ஆன்மசக்தியாக இருப்பது மாவீரர்களின் நினைவுகளே.
மாவீரர்நாள் என்பது, எந்த இலச்சியத்திற்காக எமது மாவீரர்கள் தம் இன்னுயிர்களை ஈகம்செய்தார்களோ, அந்த இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம் என்ற உறுதியை மனங்களில் நிறைத்துக்கொள்ளும் நாள்.தாயகத்தில், சிங்கள இராணுவ அடக்குமுறைக்குள், மாவீரர்களின் நினைவெழுச்சி நிகழ்வுகளை நடாத்துவதற்குரிய சாத்தியம் தற்போது இல்லை.
புலத்திலேயே, மாவீரர்களை வணங்கி வழிப்படும் தேசிய நினைவெழுச்சி நாளை, உணர்வுபூர்வமாகவும் மிகச் சிறப்பாகவும் நடாத்த, புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் அனைவரும் அணிதிரளவேண்டும்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து முடிந்ததின் தொடர்ச்சியாக, ஒற்றுமைக்கு விரோதமாகவும், தான்தோன்றித்தனமாகவும், கட்டுப்பாடுகள் அற்றமுறையிலும், பொறுப்பற்றபோக்கிலும் மேற்கொள்ளப்படும் விரும்பத்தாக போக்குகள் தேசியவிடுதலைப் போராட்டம் குறித்த, அச்சமூட்டும் சந்தேகங்களை பொதுமக்கள் மத்தியில் விதைக்கவே செய்துள்ளன.
தேசியத் தலைவரால், சிறுகச் சிறுகக் கட்டிவளர்க்கப்பட்ட, பலம்வாய்ந்த தேசியத்தளம் அறிவிலித்தனமாக, ஈவிரக்கமற்றமுறையில் சிதைத்தழிக்கப்பட்டுவருகின்றமை எங்கள் கண்ணெதிரே நடக்கின்ற கொடுமை.
ஒரு மாபெரும் இயக்கத்தை, ஒரு சிறு குழுவாகச் சிறுக்கவைக்கின்ற முயற்சி வேகமாக நடந்துவருகின்றது. இது சதியா? அல்லது சம்பந்தப்பட்டவர்களின் அறிவுநிலைப்பட்ட முடிபா? ஏன்ற சந்தேகம் பலமாக எழுகின்றது.
புலத்துமண்ணிலே, துரோகிகளாக்கப்பட்டவர்கள் அதிகமாக நிரம்பிப்போயுள்ளனர். சிங்கள அரசோடும், சிங்கள அரசுக்குத் துணைநிற்பவர்களோடும், இணைத்து வகைப்படுத்தி, தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் துரோகிகளாக்கப்பட்டுவருகின்றனர்.
தமது போக்கிற்கு ஒத்துவராதவர்கள், தமது நலன்களுக்கு இடையூறாக நிற்பவர்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்படுகின்றனர். ஒதுக்கப்படுகின்றனர். அவமானப்படுத்தப்படுகின்றனர்.
உலகமே அண்ணாந்து பார்த்த மாபெரும் விடுதலைப் போராட்டத்தை, அரசியல்தெளிவும், சமூகப்பொறுப்புணர்வும், அற்ற ஒரு சிறுகூட்டம் கையகப்படுத்த முனைகின்றது. எமக்காகப் போரிட்டு வீழ்ந்த எங்கள் மாவீரர்களின் குழந்தைகளை குடும்பங்களைப் பாதுகாக்கவோ, சிறைப்பட்டுள்ள போராளிகளினதும் அவர்களது குடும்பங்களினதும் நலன்களைக் கவனிக்கவோ, போரில் சிக்கிச் சீரழிந்துபோயுள்ள எம் மக்களின் வாழ்வை மேப்படுத்தவோ ஒருதுளி முனைப்பும் இன்றி சும்மாயிருப்பவர்கள், மாவீரர் நாளிற்கு மட்டும் உரிமை கோருவது வேடிக்கையானதும், வெட்கக்கேடானதும், வேதனையானதுமாகும்.
ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் கனவு, சிலரின் பொறுப்பற்ற போக்கால், சிதைந்தழிந்துபோக, விடுதலையின்பால் அக்கறை கொண்ட சமூகப்பொறுப்புள்ள மக்களால் அனுமதிக்கப்படவே முடியாது. இந்தப்போராட்டத்தின் தாங்கு சக்தியாக நின்றவர்கள், இதனை வளர்த்தெடுத்தவர்கள், நேரடியாகப் பங்கெடுத்தவர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள், மாவீரச் செல்வங்;களின் பெற்றார், உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லோருக்குமாக இந்த அழைப்பை விடுகின்றோம்.
மாவீரர்நாளை பணவேட்டைக்கான திருவிழாவாக நடாத்த சிலர் முனைகின்றனர். காலம்காலமாக என்ற சொல்லாடலை அவர்கள் தமக்கு வசதியாக பாவிக்கமுனைகின்றனர். சாக்கடையில் தேக்கி, இந்தப்புனிதப்போராட்டத்தை நாற்றமெடுக்கவைக்க சிலர் முயற்சிக்கின்றனர். இந்தப்போராட்டம், வீரியத்துடன், அடுத்த இலக்கு நோக்கிப் பாயும் பேராறு. அதனைத் தடுக்க எடுக்கும் முனைப்பை முறியடிக்கவேண்டும்.
கடந்த மாவீரர்நாளில், ஒருசாரார் கட்டுப்பாடற்றமுறையில் செயற்படுவதை உணர்த்திய, காலத்திற்கு முந்திய இரண்டாவது மாவீரர் நாள் அறிக்கை, தேசியவிடுதலை இயக்கத்தின் மரபை உடைத்தெறிந்த நிகழ்வாகும்.
இதுபோன்ற நிகழ்வுகள், எதிர்காலத்தில் இடம்பெறாமல் தடுக்க, பொதுமக்களே முன்வரவேண்டும். தேசியத் தலைவரின் சிந்தனையைப் பிரதிபலிக்கும் தலைமைச்செயலகம், இயக்கத்தின் பொதுமையமாகும். அனைத்துத் துறைகளும், அனைத்துப்பிரிவுகளும். ஒருங்கிணைந்து, சிந்திக்கவும், செயற்படவும் தேசியத் தலைவரின் சிந்தனையால்  வடிவமைக்கப்பட்ட தளமே தலைமைச் செயலகம்.
இயக்கத்தின் இந்தப் பொதுக்கட்டமைப்பை உடைத்துக்கொண்டு, புதிது புதிதாக, தாம் சார்ந்த துறைகளின் பேரில், ஒரு சிலர் தமது தனிப்பட்ட முடிவுகளுக்கும் தேவை
களுக்கும் அமைய, மாவீரர்நாள் அறிக்கை விடுவதும், தற்போதைய நெருக்கடியான குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு இயக்க ஆதரவுத்தளத்தை தம்பால் இழுத்துச்செல்ல முனைவதும் விடுதலைக்கான செயற்பாடாகக் கொள்ளப்படமாட்டாது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
மாவீரர்நாள் என்பது, தமிழ்மக்கள் எல்லோருக்கும் பொதுவானது. மாவீரர்களை வணக்க எல்லோருக்கும் உரித்துண்டு. இந்தநாளை அதன் அர்த்தத்தில், உணர்வுகெடாமல், எந்த உள்நோக்கமும் இல்லாமல், நடாத்தவேண்டும் என்ற பொதுவான முடிவுக்கு அமைய, பிரான்சில் மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீண்டகால தேசியச் செயற்பாட்டாளர்கள், சமூகப்பிரதிநிதிகள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவீரர்குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர்களை உள்ளடக்கியதாக இவை அமைக்கப்பட்டுள்ளன.
நிதி உட்பட அனைத்து விடயங்களிலும் வெளிப்படைத் தன்மையுடன், தெளிவான தேசியக் கொள்கையுடன் இக்குழு செயற்படும்.
புனிதமான மாவீரர்நாள் நிகழ்வுகளும், அவர் தாங்கிநின்ற தேசிய இலட்சியமும், பொறுப்பற்றவர்களின் கைகளில் சிக்கிவிடாமல் தவிர்க்க, புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் விழிப்புடனும், முனைப்புடனும் செயற்படமுன்வரவேண்டும்.
புனிதமான தேசிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிர்களை ஈகம்செய்த மாவீரர்களின் கனவு நனவாக எல்லோரும் இணைந்து உழைப்பதென உறுதிகொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழு – பிரான்ஸ்

No comments:

Post a Comment