Sunday, August 28, 2011

மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது: பொன். ராதாகிருஷ்ணன்




மன்னார்குடி, ஆக. 27: மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் பாரதிய ஜனதாவுக்கு உடன்பாடு கிடையாது என்றார் அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:  தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.
அதே சமயம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு.  நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அப்சல் குருவின் மரண தண்டனையை ஆதரித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் பாஜக அதை வரவேற்கும். நீதிமன்றங்களில் பல நிலைகளில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கியும் நிறைவேற்றாமல் உள்ள அப்சல் குருவின் மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும்.  தமிழகத்தில் கைத்தறி, நெசவுத் தொழில் நசிந்து வருகிறது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேறு தொழிலை நாடிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  எனவே, மற்ற மாநிலங்களிலிருந்து வேஷ்டி, சேலைகள் இறக்குமதி செய்வதைவிட கைத்தறி, நெசவுத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், அடுத்த ஆண்டு தைப் பொங்கலுக்குத் தேவையான வேஷ்டி, சேலைகளை நிகழாண்டே உற்பத்தி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  ஊழலை ஒழிக்க வேண்டும், அயல் நாட்டில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக பாஜக வலியுறுத்தி வருகிறது. இக் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாகவே சமூக சேவகர் அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பிரதமர், நீதித் துறை உள்ளிட்ட அனைவரையும் விசாரிக்கும் வகையில், வலுவான லோக்பால் மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே கொண்டு வர வேண்டும்.  நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் குறித்து 1991-ம் ஆண்டு தொடங்கி விசாரிக்க வேண்டும். மாநில அமைச்சர், ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மீதும் இது போன்ற புகார் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பாரபட்சமான நிலையை அதிமுக அரசு கடைப்பிடித்து வருவதாகவே தெரிகிறது.  சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்ததை பாஜக வரவேற்றதை, திமுக தலைவர் கருணாநிதி குறை கூறுவது ஏற்புடையதல்ல. தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என திமுக ஆட்சியில் அறிவித்தபோதே அதை எதிர்த்த முதல் கட்சி பாஜகதான் என்றார் ராதாகிருஷ்ணன்.  பேட்டியின்போது கட்சியின் மாநில இளைஞரணி செயலர் கருப்பு எம். முருகானந்தம், மாவட்டத் தலைவர்கள் முரளிகணேஷ் (தஞ்சை), வரதராஜன் (நாகை), சிவ. காமராஜ் (திருவாரூர்) ஆகியோர் உடனிருந்தனர்.
First Published : 28 Aug 2011 01:21:24 AM IST
   source:dinamani

No comments:

Post a Comment