Wednesday, August 17, 2011

போர்க்குற்ற விசாரணை: ஆஸியின் கோரிக்கையை நிராகரித்த தூதுவர்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா மீள் விசாரணை நடத்த வேண்டும் என்ற அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட்டின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.

அவுஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க நேற்று இந்தக் கோரிக்கையை முற்றாக நிராகரித்துள்ளார்.


போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மீள்விசாரணை நடத்த வேண்டும் என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சரின் பெண் பேச்சாளர் அண்மையில் கேட்டிருந்தார்.

கெவின் ரூட் பிரித்தானியத் தொலைக்காட்சியின் ஆவணப்படத்தை அடிப்படையாகக் கொண்டே அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் அந்த ஆவணப்படம் பொய்யானது, பக்கசார்புடையது என்று அவரது இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள அவுஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அது அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையே என்று கூறியுள்ள திசார சமரசிங்க, அந்தக் கோரிக்கைக்கான காரணங்களைக் கூறியிருந்தால் அதை தாம் கவனத்தில் எடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கை விவகாரம் ஒன்றும் அனைத்துலகப் பிரச்சினை அல்ல என்றும் அது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்றும் அட்மிரல் திசார சமரசிங்க கூறியுள்ளார்.

தம்மையும் மக்களையும் பாதுகாக்கவே போரை நடத்தியதாகவும், எனவே அதுபற்றி விசாரிக்க அனைத்துலக விசாரணைகள் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment