Wednesday, August 17, 2011

ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடித் தலையீடு! தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்பு

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் இந்திய நேரடித் தலையீடுகள் ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில் இதன் முதற்கட்டமாகத் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கை அரசுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு முன்பாகத் தமிழ்க் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னையின் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளன என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை அரசு மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், போர் முடிந்த பின்னரும் தமிழருக்கு தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிக்கும் கொழும்பின் போக்கு என்பவற்றால் இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிர்க் கட்சிகளால் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

அதேவேளை, இலங்கை அரசு சீனா பக்கம் அளவுக்கு அதிகமாகச் சாய்கிறது என்று புதுடில்லி நம்புவதால், 80களைப் போன்று அது மீண்டும் இனப்பிரச்சினை விடயத்தில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளத் தயாராகிறது என்று சென்னையில் உள்ள இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் தீர்வு தொடர்பான கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்த புதுடில்லி விரும்புகிறது என்றார். அதற்காகவே தமிழ்க் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

"தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார்'' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்  (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment