Friday, September 02, 2011

இந்தியாவை வேவு பார்த்த சீன உளவுக் கப்பலுக்கு அடைக்கலம் கொடுத்த இலங்கை!

மீன்பிடி இழுவைப் படகு போன்று வடிவமைக்கப்பட்ட சீன உளவுக் கப்பல் ஒன்று இந்தியாவைக் கண்காணித்து விட்டு சிறிலங்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிய அந்தமான் கரைக்கு அப்பால் இந்த சீன உளவுக்கப்பல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்திய ரேடர்களில் சிக்குவதற்கு முன்னர்- முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரதேசத்தில் குறிப்பிட்ட சீன உளவுக்கப்பல் சுமார் 20 நாட்கள் வரை தரித்து நின்று வேவு பார்த்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

சந்தேகத்துக்கிடமான அந்தக் கப்பலை சீன உளவுக்கப்பல் என்று உறுதி செய்து கொண்ட இந்தியக் கடற்படை உடனடியாக அந்த இடத்துக்கு போர்க்கப்பல்களை அனுப்பியது.

அதற்குள் அந்த சீன உளவுக்கப்பல் அனைத்துலக கடற்பரப்புக்குள் சென்று விட்டதால், இந்தியக் கடற்படையால் எதுவும் செய்ய முடியாது போனது.

எனினும் சீன உளவுக்கப்பல் சிறிலங்கா கடற்பரப்புக்குள் சென்று மறையும் வரை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்து சென்றுள்ளது.

தப்பிச் சென்ற சீன உளவுக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்க வேண்டும் என்று கருதப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சீன உளவுக்கப்பலில் 22 ஆய்வு கூடங்கள் இருக்கலாம் என்று இந்தியக் கடற்படை நம்புகிறது.

இந்தக் கப்பல் இந்து சமுத்திரத்தில் நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கி கப்பல்களுக்குத் தேவையான தரவுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று இந்திய அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்தக் கப்பலில் உள்ள ஆய்வு கூடங்களில் இருந்து இந்து சமுத்திரத்தில் வெவ்வேறு இடங்களின் நீரின் ஆழம், வெப்பநிலை, கடலடித்தன்மை போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்றும், இவை ரோபிடோக்களை பயன்படுத்துவதற்கு முக்கியமானவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனா பாரிய விமானம் தாங்கி கப்பல் ஒன்றை கட்டி வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள் 2017இல் முடிவடையவுள்ள நிலையில், அதற்கு இந்தத் தரவுகள் தேவைப்படலாம் என்றும் கருதப்படுகிறது.

சீனக் கடற்படை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது பலத்தைப் பெருக்கி வருவது இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதாகவும், இந்திய ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment