Saturday, September 03, 2011

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக சிறிலங்காவின் புதிய சட்டத்தை அவதானிக்கும் அமெரிக்கா


அவசரகாலச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைக் கையாள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கொண்டு வரும் புதிய சட்டம் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

நியுயோர்க்கில் நேற்று நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.


முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளிப்பதில் சிறிலங்கா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் முடிவில் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட சுமார் 11,000 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளில் 8000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளது முக்கியமான ஒரு விடயம் என்றும் மார்க் ரோனர் கூறியுள்ளார்.

அதேவேளை, இன்னமும் தடுப்புக்காவலில் உள்ள கைதிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் குற்றசாட்டுக்களைச் சுமத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

சிறிலங்காவில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் புதிய சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படுவது குறித்த பலரும் கவலை கொண்டிருப்பதை தாம் அறிவோம் என்றும் கூறியுள்ள மார்க் ரோனர், இந்தச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்த தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டுள்ளதானது மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கான முக்கியமானதொரு நகர்வு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீள நினைவுபடுத்த விரும்புவதாகவும் மார்க் ரோனர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment