முன்னாள்
பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனை
குறைக்கப்படுமானால் அது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவேன் என்று இந்த வழக்கை
விசாரித்த தலைமை அதிகாரி டி.ஆர். கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு முன் புலன் விசாரணை மேற்கொண்ட புகழ்பெற்ற காவல் துறை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன் இன்று சென்னையில் பேட்டி அளித்தார்.
அப்போது
அவர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்
குற்றம்சாற்றப்பட்டவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும்
இல்லை. நான் எனது கடமையை செய்தேன். தற்போது அரசாங்கம் தனது கடமையை
செய்யட்டும். அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனை
குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்படுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
மேலும்
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நளினியின் தண்டனை ஏற்கனவே
குறைக்கப்பட்டு இருப்பதால், தூக்குத் தண்டனை பெற்ற மற்ற 3 கைதிகளும்
தங்கள் தண்டனையை குறைக்க கோருவதற்கு உரிமை இருக்கிறது. மேலும் அவர்கள் 20
ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்திருக்கிறார்கள். அத்தோடு
அவர்களின் கருணை மனு மீது முடிவு எடுக்க 11 ஆண்டு காலம்
எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்று கார்த்திகேயன் கூறினார்.
1991ஆம்
ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே ராஜீவ்காந்தி படுகொலை
செய்யப்பட்டதை தொடர்ந்து பெங்களூரில் காவல்துறை அதிகாரியாக இருந்த
டி.ஆர்.கார்த்திகேயன் சிறப்பு தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு புலன்
விசாரணை மேற்கொண்டார். ஒரு ஆண்டு காலத்திற்குள் விசாரணையை முடித்து 41 பேர்
மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார் என்பது நினைவில்
கொள்ளத்தக்கது.
No comments:
Post a Comment