தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்தி உரிய காலத்துக்குள் அரசியல்
விவகாரங்களுக்குத் தீர்வு காணும்படி இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி
சிறிலங்காவுக்கு ஆலோசனை கூறியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலகவங்கி ஆகியவற்றின் கூட்டத்தொடர் கடந்தவாரம் வொசிங்டனில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கச் சென்றிருந்த இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சிறிலங்கா நிதி அமைச்சர் சரத் அமுனுகமவுடன் நடத்திய பேச்சுக்களின் போதே இவ்வாறு குறிப்பிட்டுளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன பேச்சுக்களை விரைவில் நடத்தி அரசியல் பிரச்சினைகளுக்கு உரிய காலத்துக்குள் உறுதியான தீர்வு எட்டப்படுவதையே இந்தியா விரும்புவதாகவும் பிரணாப் முகர்ஜி எடுத்து கூறியுள்ளதாக பிரிஐ செய்தி நிறுவனத்திடம் பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தமிழ்ச் சமூகத்தின் விருப்பங்களை நிறைவேற்றும் நீதியான- அமைதியான - கண்ணியமான தீர்வு ஒன்றுக்கு சிறிலங்கா வரும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டதாக இந்திய அரசின் மூத்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான இந்தியாவின் பொருளாதார உதவிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேச்சு நடத்தப்பட்டுள்ளது.
இந்திய உதவியுடன் வடக்கில் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முன்னோடியாக 1000 வீடுகளை அமைத்து முடித்துள்ளதாகவும், ஏனைய வீடுகளை அமைப்பதற்கான நிதியை விடுவிக்குமாறும் இந்திய நிதியமைச்சரிடம் சரத் அமுனுகம கேட்டுக் கொண்டுள்ளதாகவும் பிரிஐ மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment