இலங்கையில்
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் சம்பவங்கள்
தொடர்பாகப் பொறுப்புக் கூறுவதற்கு நம்பகமான உள்நாட்டு பொறுப்புக்கூறும்
நடவடிக்கைகள் மிக அவசியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஐக்கிய
நாடுகள் சபை பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்திக்
கூறியுள்ளார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படவேண்டியதன்
அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஐ.நா.
பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ, நியூயோர்க்கில் நேற்றுமுன்தினம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ
மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.இதன்போதே நம்பகமாக பொறுப்புக்கூறும்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று பான் கீ மூன்
வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் கடந்தகால மோதல்களுக்குக் காரணமான
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசியல்தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என்றும்
இலங்கை ஜனாதிபதியிடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்
வலியுறுத்தியுள்ளார் என்றும் ஐ.நா. செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
சனிக்கிழமை
இரவு நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்துடன்
வழக்கத்துக்கு மாறாக ஐ.நா. அதிகாரிகளின் பெரிய தொரு குழுவும்
கலந்துகொண்டது.சனி இரவு 6.20 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்புக்கு
இருபது நிமிட நேரமே ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆனால்,
அதைவிட மேலதிகமாக 10 நிமிடங்கள் சந்திப்பு இடம்பெற்றதால், ஐ.நா. செயலாளர்
நாயகத்தை அடுத்துச் சந்திக்கவிருந்த மொன்ரெனிக்ரோ பிரதிநிதிகள் காத்திருக்க
நேரிட்டது.நவநீதம்பிள்ளையின் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் நியூயோர்க்
செயலகப் பிரதிநிதியான ஐவன் சிமோனோவிக், மோதல்கள் மற்றும் பாலியல்
வன்முறைகள் தொடர்பான சிறப்பு ஆலோசகர் மாகொற் வோல்ஸ்ரோம், ஐ.நா. செயலாளர்
நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரும் இந்தச் சந்திப்பில்
கலந்துகொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.
பீரிஸ், பாலித கொஹன்ன, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க,
அமெரிக்காவுக்கான தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய ஆகியோரும் சந்திப்பில்
கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment