Friday, September 09, 2011

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வடமராட்சி கிழக்கு மக்கள் அவலம்

வட தமிழீழம் வடமராட்சி கிழக்கு மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி தொடர்ந்தும் இன்னல்கள் மத்தியில் வாழ்ந்து வருவதாக, யாழ் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில் பிரதேச மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைத்துறை நிருவாகத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


இந்த மக்களின் வாழ்நிலையைப் பார்வையிடச் சென்ற எமது செய்தியாளர், அவர்கள் படும் இன்னல் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து கொடிகாமம் ராமாவில் முகாமிலும், ஏனைய இடங்களிலும் வாழ்ந்த மக்களை, அரச பரப்புரைக்காக அவசர அவசரமாக மீளக்குடியேற அனுமதித்த யாழ் நிருவாகம், அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் எதனையும் செய்து கொடுக்கத் தவறி இருக்கின்றது.

(07-09-2011) இந்தப் பகுதிக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் தொண்டு நிறுவனம் ஒன்று ராமாவில் முகாமில் இருந்த 340 குடும்பங்களுக்கு தலைக்கு 5 குளிப்பதற்கான, மற்றும் உடை கழுவுவதற்கான உவர்நீக்கி (Soap), இரண்டு துவாலை (Towel), பற்பசை, பல்துலக்கி (Tooth Brush) ஒன்று, கத்திரிக்கோல ஒன்று என கண்துடைப்பு உதவிகளை வழங்கிச் சென்றுள்ளது.

இவற்றுடன் ஐந்து பிள்ளைகளுக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பாயும், கொசுவலையும் வழங்கப்பட்டுள்ளன.

உதவி வழங்க இருப்பதாக அறிவித்து வெற்றிலைக்கேணி, கேவில் பிரதேச மக்களை கட்டைக்காட்டு வருமாறு அழைத்த தொண்டு நிறுவனம், நாள் முழுக்க அலைந்த மக்களிற்கு சிறிய அளவிலான உதவியையே வழங்கியிருக்கின்றது.

அத்துடன், ஆயிரம் குடும்பங்களிற்கு மேல் இந்த உதவிகளைக்கூட பெறவில்லை என்பதுடன், 340 குடும்பங்கள் மட்டுமே இவ்வாறான சிறிய உதவியைப் பெற்றுள்ளன.

இதேவேளை, மீளக் குடியேறிய மக்களிற்கு வீடுகள் கட்டித் தருவதாக ஆசை வார்த்தை கூறும் சிறீலங்கா ஆக்கரமிப்புப் படையினர், பொதுமக்களின் வீடுகள், சுனாமி வீட்டுத் திட்டம் என்பவற்றிலுள்ள உடைந்த வீடுகளின் கற்களை எடுத்து, அவற்றில் முறையான அத்திவாரம் அற்ற ஒரு சில வீடுகளை கேவில் பகுதியில் கட்டிக் கொடுத்திருக்கின்றனர்.

பாதுகாப்பற்ற வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ள சிறீலங்கா படையினர், அந்த வீடுகளின் மீது படையினரால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு என எழுதி பரப்புரைச் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால், மீளக் குடியேற்றம் என்ற பெயரில் அனுமதிக்கப்பட்டு வீடுகள் இன்றி அவலப்படும் மக்களிற்கு, மற்றொரு தொண்டு நிறுவனமான ZOA (சோஆ) ஒரு சில தற்காலிக குடிசைகளை அமைத்துக் கொடுத்திருப்பதாக செய்தியாளர் கூறுகின்றார்.

மக்கள் வீடுகள் இன்றி அவலப்படும் நிலையில், மக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படையினர் கட்டைக்காடு – சுண்டிக்குளத்திற்கு இடையில் பாரிய கடற்படை முகாம் ஒன்றை பெரும் பொருள் செலவில் அமைத்துள்ளனர்.

இதேபோன்று ஆழியவளையிலும் 30 ஏக்கர் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படையினர், காணி உரிமையாளர்களை வேறு இடங்களிற்கு சென்று இருக்குமாறு விரட்டிவிட்டு, பாரிய படைத்தளம் ஒன்றை அங்கு அமைத்துள்ளனர்.

No comments:

Post a Comment