அடுத்த
வாரம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை
நடை முறைப்படுத்துவது எவ்வாறு என்பது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம்
தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் என்று ஐ.நாவுடன் தொடர்புடைய உயர்மட்ட
இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இது
தொடர்பில் தனது ஆலோசர்களுடன் பான் கீமூன் தொடர்ச்சியாகப் பல சந்திப்புக்களை
ஏற்கனவே நடத்தி இருக்கின்றார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனால் இலங்கை அரசும் தனது எதிர் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாகத்
தெரிகிறது. எதிர்வரும் 12ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 18ஆவது
கூட்டத் தொடர் ஆரம்பமாகிறது. அந்த அமர்வில், இலங்கையில் இடம்பெற்றன என்று
கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விவகாரமே முக்கியமாக
விவாதிக்கப்படவேண்டுமென அமெரிக்கா, பிரிட்டன் உட்பட்டப் பல நாடுகள்
இராஜதந்திர அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன.
இதனால்
இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்குலக நாடுகளால் இந்தக் கூட்டத் தொடரில்
முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2009ஆம் ஆண்டு
போர் முடிந்த கையோடு மனித உரிமைகள் சபையில் இவ்வாறு மேற்கு நாடுகளால்
கொண்டுவரப்பட்ட இதுபோன்றதொரு தீர்மானம் இலங்கையால் முறியடிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கையில் போருக்குப் பிந்திய அபிவிருத்திக்கு உதவவேண்டும் என்று
இலங்கை ஆதரவு நாடுகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கைக்கு
ஆதரவான அந்தத் தீர்மானத்தை அன்று இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய
நாடுகளுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகள் என்பன
ஆதரித்தன. எனினும் அதன் பின்னர் போர்க் குற்றச்சாட்டுக்களில் இலங்கை
ஈடுபட்டது என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் உள்ளன என்று ஐ.நா. பொதுச்
செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு வெளியிட்ட அறிக்கை மற்றும்
பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம்
ஆவணப்படம் என்பன வெளியாகிய நிலையில் உலகின் கருத்து இன்று பெருமளவில்
மாற்றமடைந்துள்ளன.
இந்தக்
குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச தரத்திலான விசாரணையை நடத்துமாறு
மேற்குலக நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தி வந்தபோதும் கடந்த இரண்டு
ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அவ்வாறான ஒரு விசாரணையை நடத்த அடியோடு மறுத்து
வருவதுடன் போர்க் குற்றங்கள் எவையும் இங்கு இடம்பெறவில்லை என்றும்
திரும்பத் திரும்பக் கூறிவருகிறது.
இத்தகைய
பின்னணியிலேயே தற்போது மீண்டும் இலங்கை மீது ஐ.நா. மனித உரிமைகள் சபையில்
தீர்மானம் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான ஒரு
நிலையில் என்ன செய்வது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை எப்படி
நடைமுறைப்படுத்துவது என்பன தொடர்பாகவே பான் கீமூன் ஆலோசனை நடத்தி
வருகிறார்.
நிறைவேற்றப்படும்
தீர்மானம் சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை நியமிக்கும்படி கோரும் என்றே
அனேகமாக எதிர்பார்க்கப்படும் நிலையில், மனித உரிமை மீறல்கள் குறித்து
விசாரிக்கும் அத்தகைய குழுவை எவ்வாறு நியமிப்பது, அதற்கான சட்டதிட்டங்கள்
என்ன, விசாரணைக்கான காலவரையறை, உள்ளடக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கை
என்பன உட்பட்டப் பல விடயங்களையே ஐ.நா. செயலாளர் ஆராய்ந்திருக்கிறார் என்று
தெரியவருகிறது. ஐ.நா. செயலரின் இந்த நடவடிக்கைகள் குறித்து ஐ.நாவுக்கான
இலங்கை தூதரகம் இலங்கை அரசுக்கு அறிவித்திருப்பதாகவும் இராஜதந்திர
வட்டாரங்கள் மூலம் அறிய முடிகின்றது.
No comments:
Post a Comment