Friday, January 20, 2012

பாட்டுப் பாடியே ஈழத் தமிழரை ஏமாற்றிய கருணாநிதி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மரணத்துக்கு மு. கருணாநிதி எழுதிய இரங்கல் பாட்டு வெறும் வாய் வீச்சுதான் என்று அவதானிகள் நம்புகின்றனர் என சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்ச்செல்வன் இலங்கை விமானப் படையினரின் தாக்குதலில் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 02 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

அந்நாட்களில் தமிழக முதல்வராக இருந்தவர் மு. கருணாநிதி.

இவர் தமிழ்ச்செல்வனின் மரணத்துக்கு இரங்கல் பா மூலம் மறுநாள் அஞ்சலி செலுத்தினார்.

இவரது இரங்கல் பா உத்தியோகபூர்வமாக ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் தலைவர் ஒருவருடைய மரணத்துக்கு எப்படி தமிழக முதல்வர் அஞ்சலி செலுத்த முடியும்? பரபரப்புக் கேள்விகள் எழும்பின.

ஜெயலலிதா உஷாராகி விட்டார். கருணாநிதிக்கு புலிகளுடன் இரகசிய தொடர்பு உள்ளது, இவரது செயல் அரசமைப்புக்கு முரணானது, இவரது ஆட்சியை மத்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்று அறிக்கை மூலம் கோரி இருந்தார்.

ஆனால் கருணாநிதி வெறுமனே வாயால்தான் இலங்கைத் தமிழர்களுக்கு சேவை செய்கின்றார், அவர் இதைத் தவிர வேறு ஒன்றும் இலங்கைத் தமிழர்களுக்காக செய்கின்றமை கிடையாது என்று அவதானிகள் நம்புகின்றனர் என்று அமெரிக்கா கண்டு கொண்டது.

கருணாநிதியின் அனுதாபம் புலிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடாது, புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும், வார்த்தைகளை கணக்கெடுக்காதீர்கள், எமது நடவடிக்கைகளை கவனியுங்கள் என்று பொலிஸ் தரப்பினர் அமெரிக்க அதிகாரிகளுக்கு சொல்லி இருக்கின்றனர்.

சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தில் இருந்து 2007 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்த இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் வெளியில் வந்து விட்டன.

No comments:

Post a Comment