இது குறித்து அதிமுக பொது செயலர் ஜெயலலிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாக மாறியது. அந்த தியாக வேள்வியில் இன்னுயிரை துறந்த மொழிபோர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும்.
அன்னைத் தமிழுக்காக ஆவியை துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 25.1.2012ம் தேதி அதிமுக மாணவர் அணி சார்பாக கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வீர வணக்க நாளை யொட்டி பொதுக் கூட்டங்கள் நடைபெறும். அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற கேட்டுக் கொள்கின்றேன்.
மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள், நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், மாவட்டக் கழக நிர்வாகிகளுடனும் அறிவிக்கப்படும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும் இணைந்து பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர், இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ பிரிவு, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசாறை உள்ளிட்ட அதிமுக கட்சியின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு, பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்த வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment