மார்க்கெட்களில் கரும்பு, மஞ்சள், காய்கறி விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (15-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த திருவிழா, போகி பண்டிகையுடன் இன்று தொடங்கியது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் இருந்த பழைய பொருட்களை மக்கள் இன்று அதிகாலை வீட்டு முன்பு போட்டு எரித்தனர். வீடுகளை சுத்தம் செய்து தோரணங்களால் அலங்கரிக்க தொடங்கியுள்ளனர்.
பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த புதுநெல் மற்றும் காய்கறிகளை சூரியனுக்கு படைத்து வணங்கி மகிழ்வது வழக்கம்.
கிராமப்புற மக்களில் பெரும்பாலோர் வேலை, தொழில், படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை போன்ற நகரங்களுக்கு சென்றுவிட்டனர்.
அவர்கள் இதுபோன்ற பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வருவார்கள். அதிலும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடவே எல்லாரும் விரும்புவர்.
அதற்காக குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கி விட்டனர். தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு முன்பே ஹவுஸ்புல் ஆகிவிட்டன.
சிறப்பு ரயில்கள், கூடுதல் சிறப்பு ரயில்களிலும் சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்துவிட்டது. மக்களின் வசதிக்காக 5 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று முதல் சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ், ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களிலும் கோயம்பேடு, தாம்பரம் பஸ் நிலையங்களிலும் மக்கள் வெள்ளமென திரண்டிருந்தனர்.
கோயம்பேடு மட்டுமல்லாமல் தாம்பரத்தில் இருந்தும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வளவு பஸ்கள் இயக்கப்பட்டபோதும், இடம் கிடைக்காமல் பயணிகள் திண்டாடினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டிராவல்ஸ் நிறுவனங்கள் வேன், கார்களில் பயணிகளை ஏற்றிச் சென்றனர்.
கூடுதல் கட்டணம் கொடுத்து இவற்றில் மக்கள் பயணம் செய்தனர். ஆம்னி பஸ்களில் வழக்கத்தைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பொங்கலையொட்டி, கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, வாழைத்தார், மஞ்சள்குலை, கரும்பு, பனங்கிழங்கு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை களை கட்டியுள்ளது.
சென்னை தவிர ஈரோடு, திருச்சி, சேலம், மதுரை, நெல்லை உள்பட அனைத்து ஊர்களிலும் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
10 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.200-க்கும், 25 பனங்கிழங்கு கட்டு ரூ.40, மஞ்சள்குலை தரத்திற்கு ஏற்றாற்போல் ரூ.10 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டன.
பூசணி உள்ளிட்ட காய்கறிகள், பழங்கள் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது. விற்பனையுடன் சேர்த்து விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு சாமந்திப்பூ கிலோ 10 ரூபாய்க்கு வாங்கக்கூட ஆள் இல்லாமல் குப்பையில் கொட்டப்பட்டது. ஆனால், நேற்று ஒரு கிலோ சாமந்தி 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சுற்றுலா தலங்களில் சிறப்பு ஏற்பாடு
செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால் முக்கிய சுற்றுலா தலங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்காக்களில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை நாளாகும். காணும் பொங்கலையொட்டி இந்த வாரம் செவ்வாய்க்கிழமை வண்டலூர் உயிரியல் பூங்காவும் கிண்டி சிறுவர் பூங்காவும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழவேற்காடு, மெரினா, பெசன்ட்நகர் பீச், மாமல்லபுரம், விஜிபி, எம்ஜிஎம், முட்டுக்காடு படகுத்துறை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் விழா நேற்றே களைகட்டி விட்டது. மக்கள் உற்சாகத்துடன் கோலாகலமாக பொங்கல் பண்டிகை கொண்டாட தயாராகி விட்டனர்.
No comments:
Post a Comment