Saturday, January 21, 2012

தேசியம் பேசி தமிழ்தேசியத்தை சிதைக்கும் புலனாய்வாளர்கள்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசிய செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் கைக்கூலிகளே செயற்பட்டு வருகின்றனர் என்பது யாருக்கும் புரிதாக ஒரு விடயமல்ல. இதற்கு அடிப்படையில் பலமான காரணங்கள் உண்டு.

அக்காரணங்களைப் பார்ப்பதற்கு முன்னதாக கடந்த 31.12.2011 ஆம் திகதி இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் கோயிலில் வைத்து இடம் பெற்ற சம்பவம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  தாயகத்தில் எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு அது வளர்ச்சிபெற்று வந்த ஏககாலத்தில் புலம்பெயர் நாடுகளிலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு பங்களிப்புகளும் இடம் பெற்ற வந்தன.
இச்செயற்பாடுகள் அனைத்தும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பாக இடம் பெறவேண்டுமென்ற நீண்டகால சிந்தனையின் அடிப்படையில் தேசியத் தலைவரினால் அனைத்துலகக் கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இந்த அனைத்துலகக் கட்டமைப்பே இன்றும் தேசிய செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்து வருவதுடன் அனைத்துலகக் கட்டமைப்பின் கீழ் ஒவ்வொரு நாடுகளிலும் தமிழர் ஒருங்கமைப்புக்குழு இயங்கி வருகின்றது.
இலண்டனைப் பொறுத்தவரை இந்த தமிழர் ஒருங்கமைப்புக்குழு ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று ஆலயங்களில் தமிழர் வெளியீடுகள் விற்பனை செய்வதுடன் காலத்திற்குக் காலம் ஏற்படும் தேவைக்கு ஏற்ப அரசியல் வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பது வழக்கம். இதேபோன்று கடந்த இந்த வருடம் சனவரி முதலாம் திகதி மேற்படி வேலைத்திட்டங்களை செய்வதற்கான ஒழுங்குபடுத்தல்களில் தமிழர் ஒருங்கமைப்புக்குழுவின் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இம்முறை அவர்கள் வெளியீடுகளை விற்பனை செய்வது மாத்திரமின்றி இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்காலில் இடம் பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் ஒரு இலட்சம் கையொப்பங்களைப் பெற்று ஐ.நா.சபைக்கு அனுப்புவதற்கான வேலைகளை திட்டமிட்டிருந்தனர். இதற்கென ஆலய நிர்வாகத்திடம் அனுமதி பெற்று ஆலயத்தின் முன்பக்கமாக ஒரு கூடாரம் அமைக்கும் வேலையிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு மகளீர் அமைப்பினரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருந்தனர்.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நாவுக்கு கையொப்பம் திரட்டும் வேலை இடம் பெறவுள்ளது என்பதை அறிந்து கொண்ட சிங்களப் புலனாய்வின் கைக்கூலிகள் சிலர் அங்கு வந்து கூடாரம் அமைத்துக் கொண்டிருந்த தேசிய செயற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன் இவ்வாறான வேலைகளை செய்வதற்கு தாங்கள் விடமாட்டோமெனக் கூறி பெரும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்ததுடன் பெண்கள் நிற்பதையும் பொருட்படுத்தாது கெட்ட வார்த்தைகளையும் தாராளமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
எனினும் தேசிய செயற்பாட்டாளர்கள் இந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாது தொடர்ந்து தமது வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது இக்கைக்கூலிகள் தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல் காரணமாக நீண்டகாலமாக தேசிய செயற்பாட்டாளர்களான பொன்னம்பலம் நித்தியானந்தன் (நித்தி) கணபதிப்பிள்ளை செந்தில்வேல் (செந்தில்) கந்தையா நவரெட்ணசிங்கம் (சின்ராசு) ஆகியோர் காயமடைந்ததுடன் மயக்கமுற்றனர்.
பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவினர் மற்றும் பிரித்தானிய காவல்துறை என்பனவற்றுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் உதவியினால் இவர்கள் காப்பாற்றப்பட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மூவரும் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.  இத்தாக்குதல்களை நடத்தியவர்கள் தலைமைச்செயலகம் என இயங்கிக் கொண்டிருக்கும் குழுவினருடன் இணைந்து செயற்படுபவர்கள் என மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் இதுதான் முதற்தடவையானதல்ல. இதேகுழுவினர் தேசிய நினைவெழுச்சி நாள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பல செயற்பாடுகளைச் செய்ததுடன் பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் தனம் எனப்படும் தனசீலன் உட்பட பல செயற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். பிரான்சில் அந்நாட்டின் பொறுப்பாளர் றீகன் எனப்படும் பரிதி மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.  எனவே முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் இடம் பெற்றுவரும் தேசிய செயற்பாடுகள் மற்றும் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றம், இனஅழிப்பு என்பனவற்றை முடக்கும் வகையில் திட்டமிட்ட ரீதியில் இத்தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்று வருவதை நாம் உற்றுநோக்க முடியும்.
ஏன் இவ்வாறான சம்பவங்கள் தற்போது புலம்பெயர் நாடுகளில் இடம் பெற்று வருகின்றது என்பதை நாம் சற்று பார்க்க வேண்டும்.  தமிழீழ விடுதலைப்போராட்டம் தாயகத்தில் வீழ்சியடைந்த பின்னர் சிங்களத்தின் குறி புலம்பெயர் நாடுகளைநோக்கியே திரும்பியது. அதற்குக் காரணம் விடுதலைப்போராட்டத்தின் எழுச்சிக்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் வழங்கிய பங்கழிப்பும் ஆதரவும் முக்கியமானதாக இருந்ததுடன் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் புலம்பெயர் மக்கள் பெரும் பலத்துடன் சர்வதேசத்திற்கு அழுத்தங்களைக் கொடுப்பார்கள் என்ற அச்சம் சிங்கள தேசத்திற்கு ஏற்பட்டது. அந்த அச்சம் தீர்வதற்கு முன்னரே புலம்பெயர் மக்களும் அதன் தேசிய அமைப்புகளும் சர்வதேசத்திற்கு சிறிலங்காவுக்கு எதிரான அழுத்தங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் நடுங்கிப்போன சிறிலங்கா அரசாங்கம் தனது மூளையைப் போட்டுக் குடைந்து கொண்டது. இறுதியில் புலம்பெயர் நாடுகளில் மக்கள் பலத்தை உடைப்பதென்றால் அங்கு செயற்பட்டு வரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களை அச்சமடைய வைப்பது, தேசிய வேலைகளில் இருந்து முடக்க வைப்பது போன்ற திட்டங்களைப் போடத் தொடங்கியது.
இதற்கு ஒரே வழி தமிழர்களை அடக்க தமிழர்களையே பயன்படுத்தும் பொறிமுறையை கோத்தபாயாவின் நெறிப்படுத்தலில் தனது புலனாய்வுத்துறையின் உதவியுடன் போட்டது. சிறிலங்கா அரசு. அதற்கு ஏதுவாக சில முன்னாள் போராளிகள் உட்பட சிலரை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் இங்கு வந்து மேலும் சிலரை தங்களுடன் இணைத்துக் கொண்டு தாங்களும் தேசியம் தொடர்பான வேலைகளிலேயே ஈடுபடுவதாக மக்களை ஏமாற்றிக் கொண்டு இவ்வாறான சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
சிங்களம் செய்ய வேண்டிய வேலைகளை கேவலம் எமது தமிழர்களே செய்து சிறிலங்காவுக்கு மகிழ்சியைக் கொடுத்து வருகின்றனர்.  ஒன்றை மட்டும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் இக்கட்டான காலகட்டம். இச்சதித்திட்டங்களும் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மீதான தாக்குதல்கள் இத்துடன் நின்றுவிடப்போவதில்லை. எமது மக்களின் விடுதலையை இல்லாமல் ஆக்கும் வகையில் எமது புலம்பெயர் மக்களின் ஒற்றுமை, பலம் என்பனவற்றை சிதைத்து தமிழன் தலைதூக்கவிடாமல் செய்யும்வரை தொடரத்தான் போகின்றன.
ஆனாலும் எமது மக்கள் உறுதியானவர்கள் தேசியத்திலும் எமது கொள்கையிலும் தளராத பற்றுக் கொண்டவர்கள் அவர்கள் இந்த மிரட்டலுக்கோ அல்லது ஏமாற்று வித்தைகளுக்கோ மயக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு. அது மாத்திரமின்றி எமது மக்கள் தற்போது இந்த போலிகளை நன்கு இனங்கண்டும் வருகின்றனர்.  ஈலிங் கனகதுர்க்கை ஆலயத்தில் வைத்து மூன்று தேசிய செயற்பாட்டாளர்கள் தாக்கப்பட்டாலும் மறுநாள் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தேசிய செயற்பாட்டாளர்கள் எந்தவித சோர்வோ அச்சமோ இன்றி மகளீர் உட்பட தமது வேலைகளை தொடர்ந்து செய்தனர். இது மக்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. இதுவே எமது தேசியத்தின் மீது அவர்கள் கொண்ட உறுதிப்பாட்டின் ஆதாரம்.

No comments:

Post a Comment