Sunday, February 19, 2012

மஹிந்தருக்கு ஆத்திரமூட்டிய ரணிலின் 10 பக்க அறிக்கை!!

பாகிஸ்தானில் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட அறிக்கை கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வாரஇதழ் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு-

“இரண்டுநாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இஸ்லாமாபாத்திலுள்ள செரீனா விடுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை தங்கியிருந்தபோது, கொழும்பில் இருந்து கிடைத்த தகவலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரியப்படுத்தினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் 10 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளதாக அவர் கூறினார்.

அதே அறிக்கையை சிறிலங்கா அதிபருக்கு ஒரு நாள் முன்னதாக ரணில் விக்கிரசிங்க அனுப்பியியிருந்தார்.

ஆனால் அப்போது அவர் பாகிஸ்தான் புறப்பட்டிருந்ததால், அந்தக் கடிதம் பிரிக்கப்படாமல் கொழும்பிலேயே இருந்தது.

அவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் தொடர்ந்தது.

அதையடுத்து சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க கொழும்பில் இருந்த ஐதேக முன்னாள் தவிசாளரும், ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குரியவருமான மலிக் சமரவிக்கிரமவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

ஐதேகவின் அறிக்கை தொடர்பான சிறிலங்கா அதிபரின் கவலையை சுருக்கமாக கூறிய லலித் வீரதுங்க தொலைபேசியை வெளிவிகார அமைச்சர் பீரிசிடம் கொடுத்தார்.

பீரிசுடம் தனது கவலையை அவரிடம் தெரியப்படுத்தி விட்டு சிறிலங்கா அதிபரிடம் தொலைபேசியைக் கொடுத்தார்.

“விக்கிரமசிங்க ஏன் இப்படிச் செய்கிறார்?“ என்று மலிக் சமரவிக்கிரமவிடம் சிங்களத்தில் கேட்டார் மகிந்த ராஜபக்ச.

இந்தப் பதில் ஒன்றே சிறிலங்கா விவகாரத்தை அனைத்துலக மயப்படுத்தப் போதும் என்று ராஜபக்ச கூறினார்.

பின்னர், இந்த விவகாரத்தை ரணிலுக்கு எடுத்துச் சொன்னார் மலிக் சமரவிக்கிரம.

நாடாளுமன்றத்தில் தான் வெளியிட்ட அறிக்கை உடனடியாகவே தாக்கத்தை ஏற்படுத்தியதையிட்டு ரணில் விக்கிரமசிங்க மகிழ்ச்சியடைந்தார்.“ இவ்வாறு கூறியுள்ளது கொழும்பு ஆங்கில வாரஇதழ்.

இதற்கிடையே ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகளுடனான மதிய உணவுக் கலந்துரையாடல் ஒன்றை அடுத்தே இந்த அறிக்கையை வெளியிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment