Monday, February 20, 2012

அமெரிக்காவிடம் மண்டியிடாது சிங்கக் கொடி! அமைச்சர் நிமால் சூளுரை!!

""ஜெனிவா மாநாட்டில் தோல்வியைச் சந்திப்பதற்கு அமெரிக்கா விரும்பவில்லை. அதே போன்றுதான் சிங்கக்கொடியைக் கையிலெடுத்த நாமும் மண்டியிடத் தயாரில்லை. வெற்றிக்கான எமது போராட்டம் தொடரும்'' என்று சூளுரைத்துள்ளார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா.
இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் சீனா, இந்தியா, ரஷ்யா, கியூபா, அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா தற்போது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

உலகிற்கு கடன்பட்டே நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தோம். அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தவேண்டியுள்ளது. இந்நிலையில் மக்கள் நிவாரணம் கோருவது நல்லதல்ல என்றும் அவர் கூறினார்.

ஜெனிவா மாநாடு மற்றும் எரிபொருட்கள் விலையேற்றத்தால் ஏற்பட்ட பிரச்சினை உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தச் செவ்வியில் அமைச்சர் முக்கியமாகத் தெரிவித்துள்ள சில கருத்துகள் வருமாறு:

தென்னாபிரிக்காவில் கற்றறிந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு எட்டு வருடங்கள் எடுத்தன. நாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையைப் பகிரங்கப்படுத்தி இரண்டு மாதங்கள்தான் கடந்துள்ளன. அதற்குள் இவற்றைச் செய்துமுடிக்க முடியுமா?
தென்னாபிரிக்கா அனைத்துவித சிபாரிசுகளையும் நடைமுறைப்படுத்தியதா என நாம் ஜெனிவாத் தொடரில் கேள்வி எழுப்புவோம். அத்துடன், அவ்வாறு செய்யமுடியுமா என்றும் நாம் கேட்போம்.

சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் தேவையல்லவா? கொத்துரொட்டியொன்றைத் தயாரித்து வழங்குவதுபோல் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணமுடியாது.

அனைத்து மக்களுக்கும் உரித்தானவகையிலேயே அரசியல் தீர்வு வடிவமைக்கப்படவேண்டும். நாட்டுக்காக உயிரைத் தியாகம்செய்த இராணுவத்தினரைக் காட்டிக்கொடுக்க முடியுமா? இந்த விடயத்திலும் எமக்கென்று சில கடப்பாடுகள் உள்ளன. சர்வதேசத்தின் தாளத்திற்கேற்ப எம்மால் ஆடமுடியாது.

எமது சுயாதீனத்தன்மை, இறையாண்மை ஆகியவற்றை சர்வதேசத்திடம் தாரைவார்ப்பதற்கு நாம் தயாரில்லை.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலக்கெடுவொன்றைத் தருமாறு அமெரிக்கா எம்மிடம் கோருகிறது.

எமக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை என்னவென்பது தொடர்பில் எதுவும் தெரியாது. எனினும், எவ்வாறான பிரேரணை வந்தாலும் அதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிடுவோம். ஏனெனில், இது உள்நாட்டுப் பிரச்சினை. சர்வதேசத்தின் அழுத்தங்களுக்குப் பணியும் நிலைப்பாட்டில் நாம் இல்லை.

இலங்கைக்கு உதவுவதற்கு நிறைய நாடுகள் உள்ளன. சீனா, இந்தியா, ரஷ்யா, கியூபா, அல்ஜீரியா அதேபோன்று சில ஆபிரிக்க நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாகவே செயற்படும். எனவே, இந்நாடுகளுக்கு அமெரிக்கா ஏதோவொரு வடிவில் அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது. ஏனெனில், தோல்வியைச் சந்திப்பதற்கு அமெரிக்கா விரும்பவில்லை. அதேபோன்றுதான் நாமும். நாமும் சிங்கக்கொடியைக் கையில் எடுத்தவர்கள். அதனால் நாம் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை.

No comments:

Post a Comment