Monday, February 20, 2012

ஐ. நா கூட்டத் தொடரில் இந்திய ஆதரவைப் பெற காய் நகர்த்தும் இலங்கை!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அந்த மாநாட்டில் இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்திலான காய் நகர்த்தல்களை என்றுமில்லாதவாறு முன்னெடுத்து வருகின்றது என நம்பகரமாகத் தெரியவருகிறது.

ஜெனிவா மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து எவ்வாறானதொரு வகிபாகத்தை வகிப்பது தொடர்பில் இந்தியா ஆழமாகப் பரிசீலித்துவரும் தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், கொழும்பு அரசு தனது உயர்மட்ட இராஜதந்திரிகளடங்கிய குழுவொன்றை டில்லிக்கு அனுப்பி வைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.

டில்லியில் நிலைகொண்டுள்ள இலங்கை இராஜதந்திரிகள் பட்டாளம் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் முக்கிய அதிகாரிகளைச் சந்தித்து ஜெனிவா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவித்தன.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்போம் என அறிவித்துள்ள அமெரிக்காவின் இராஜதந்திரிகள் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியுள்ள நிலையில், இரு நாட்டு இராஜதந்திரிகளும் சந்தித்துப் பேசுவதானது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

அதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பில் பாரதத்துடன் வொஷிங்டன் பலமுறை கலந்துரையாடியுள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதொன்றாகும். அண்மையில், இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் மற்றும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் சந்தித்து அது விடயம் தொடர்பில் பேச்சு நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக பிரேரணை வரும் பட்சத்தில் எவ்வாறானதொரு நிலைப்பாட்டை அது விடயம் தொடர்பில் எடுப்பது என்பது குறித்து இந்திய அரசின் இராஜதந்திரிகள் குழுவொன்று தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றது என்றும், அந்தப் பரிசீலனையை அதற்கு சாதகமான முறையில் மாற்றியமைக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளது என்றும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, 19ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு இந்தியா பக்கபலமாக இருந்தது. இந்தியா இம்முறை எவ்வாறானதொரு தீர்மானத்தை இலங்கை விவகாரம் தொடர்பில் எடுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் புரியாத புதிராகவே உள்ளது என்றும் ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்.

No comments:

Post a Comment