Tuesday, February 21, 2012

சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பணியகம் எழுச்சியுடன் திறந்துவைக்கப்பட்டது.

சுவிஸ் வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து தமிழ் சமூகத்தினதும் தமிழர் தாயகத்தினதும் செயற்ப்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவின் பணியகம் Zürich மாநிலத்தில் Militärstr 84, 8004 Zürich எனும் இடத்தில் 19.02.2012 நண்பகல் 12:00 மணியளவில் எழுச்சியுடன் திறந்துவைக்கப்பட்டது.

மங்கள விளக்கினை தேசிய உணர்வாளர்கள் ஐவர் சம்பிரதாய முறைப்படி ஏற்றிவைக்க தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு. ரகுபதி அவர்கள் நாடாவினை வெட்டி பணியகத்தினை திறந்துவைத்தார். தொடர்ந்து மாவீரர்களது நினைவு ஆலயத்திற்கு மாவீரர் ஒருவரின் சகோதரி ஈகைச் சுடரினை ஏற்றிவைத்து மலர்வணக்கமும் செலுத்தினார். அதன்பின்னர் அகவணக்கம் இடம்பெற்றது.

தாயகக் கனவுகளோடு சாவினைத்தழுவி கல்லறைகளில் உறங்குகின்ற மாவீர செம்மல்களின் கனவுகளை நிறைவேற்றும் பொருட்டும் தமிழர்களின் விடிவிற்காகவும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியில் செயற்ப்படுவதற்கு இந் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் உறுதியெடுத்துக்கொண்டனர்.

இந் நிகழ்வில் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்ப்பாட்டாளர்கள், தாயகப் பற்றாளர்கள், வர்த்தகப் பெருந்தகைகள் என நூற்றுக்கணக்காணோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

இன்று திறந்துவைக்கப்பட்ட இந்த பணியகம் சிறந்த முறையில் பணி புரிவதற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் தமது ஆதரவினை இன உணர்வுடன் வழங்க வேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

இந்தப் பணியகம் சிறந்த முறையில் இயங்குவதற்கு சுவிஸ் வாழ் தமிழ் வர்த்தகர்களும், தாயக உணர்வாளர்களும் தமது ஆதரவினை வழங்குவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment