ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில தீர்மானத் துள்ளமையை அடுத்து தனக்கான ஆதரவைத் திரட்டிக்கொள்வதில் கொழும்பு தீவிரமாக உள்ளது.
இலங்கையிலிருந்து டில்லிக்கு விரைந்த உயர்மட்டக் குழு, ஜெனிவாவில் தமக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்க உதவுமாறும், இது விடயம் தொடர்பில் ஏனைய அங்கத்துவ நாடுகளுடன் பேசி, சாதகமான பதிலொன்றைத் தருமாறும் கோரியுள்ளது.
இதற்கு புதுடில்லி தரப்பிலிருந்து உறுதியான சாதகமான பதிலொன்று கொழும்புக் குழுவினருக்கு கிடைக்கப்பெறவில்லை.
இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்று தாம் தீவிரமாகப் பரீசிலித்து வருகின்றனர் என்றும் இலங்கை விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளுடன் சமரசம் பேசமுடியாது என்றும் புதுடில்லி ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது.
இராஜதந்திர வழிமுறைகள் தோல்வியை நோக்கிப் பயணிக்கும் தற்போதைய சூழ்நிலையில், தாம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லியும் நிராகரித்துள்ளமையால் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது என அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.
இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தாம் ஆதரிக்கப்போவதாக வாஷிங்டன் பகிரங்கமாக அறிவித்துள்ளமையால் ஜெனிவா மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளும் தத்தமது நிலைப்பாடுகளை ஆழமாக மதிநுட்பத்துடன் பரிசீலித்து வருகின்றன.
அதுமட்டுமின்றி, எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனிவா மாநாடு ஆரம்பமானாலும் இலங்கை விவகாரம் தொடர்பில் மார்ச் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்திலேயே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறும் எனவும் அறியக்கூடியதாகவுள்ளது.
No comments:
Post a Comment