Tuesday, February 07, 2012

வே.பாலகுமாரன் எங்கே? - செய்தியாளரின் கேள்விக்கு பதிலளிக்காமல் மழுப்பிய கோத்தாபய.

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வே.பாலகுமாரன் குறித்து இந்திய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு முறையாகப் பதிலளிக்காமல் மழுப்பியுள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான்சிங்கிற்கு கொழும்பில் நேற்று அளித்த தனிப்பட்ட செவ்வி ஒன்றிலேயே கோத்தாபய ராஜபக்ச பாலகுமாரன் குறித்து தெளிவாகப் பதிலளிக்காமல் மழுப்பியிருக்கிறார்.

வடக்கில் அதிகளவில் படைகளைக் குவித்து இராணுவ மயப்படுத்தி வருவதாக தமிழ்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவில் உள்ள 22 மாவட்டங்களையும் போன்று தான் வடக்கிலும் அவசியமான படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

30 ஆண்டு காலப்போர் முடிவுக்கு வந்த குறுகிய காலத்துக்குள் பாரியளவிலான அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், வழமைநிலையை கொண்டு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் இதனை அங்கீகரிக்கவில்லை என்பது குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், “தேவையற்ற விவகாரங்கள் குறித்தே, எமக்கு எதரான தடைகள் பற்றியே அவர்கள் பேசுகின்றனர், இது நீதியா?“ என்றும் கோத்தாபய ராஜபக்ச கேள்வி எழுப்யுள்ளார்.

“இது ஒரு சாதாரணமான கிளர்ச்சியல்ல. ஒரு உண்மையான போர். விடுதலைப் புலிகளை ஏனைய தீவிரவாத அமைப்புகளுடன் நீங்கள் ஒப்பிட முடியாது. அல்-கெய்டாவுடன் கூட ஒப்பிட முடியாது.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் சாதிக்கவில்லை. இதனை ஏன் ஒருவரும் அங்கீகரிக்கவில்லை எனறும் அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.

“அரசாங்கம் மிகப்பெரிய வேலையைச் செய்து முடித்துள்ளது. 300,000 இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்றியுள்ளது. சுமார் 11,000 விடுதலைப் புலிகளை புனர்வாழ்வு அளித்துள்ளது.
இந்த முன்னாள் போராளிகளை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வைத்திருக்காமல் சமூகத்துடன் இணைக்க புனர்வாழ்வுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறோம்.

இன்னமும் 700 முன்னாள் போராளிகள் மட்டும் தான் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.“ என்றும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வே.பாலகுமாரன் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், “குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விவகாரங்கள் எனக்குத் தெரியாது.

அவர் தடுத்து வைக்கப்பட்டள்ளாரா என்று எனக்குத் தெரியாது. அறியப்பட்ட பிரமுகர்களில் பெரும்பாலானோர் இறுதிப்போரில் கொல்லப்பட்டு விட்டனர்.

சிலர் சரணடைந்தனர். அங்கே அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் மற்றும் ஏனைய முகவரமைப்புகள் சரணடையும் நடவடிக்கைகளின் போது இருந்தனர்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரணடைந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த கோத்தாபய ராஜபக்ச, உயிர்தப்பியோரையும், சரணடைந்த புலிகளையும் பொறுப்பேற்ற போர் வலயத்தில் பிரான்சின் எம்எஸ்எவ் மருத்துவக்குழுவினர், இந்திய மருத்துவக் குழுவினர் உள்ளிட்ட அனைத்துலக முகவரமைப்புகள் இருந்தன.“ என்றும் கூட்டிக்காட்டியுள்ளார்.

“வடக்கில் குறைந்தளவு படையினரே நிலைகொண்டுள்ளனர். இராணுவ கன்டோன்மென்ட்கள் காஸ்மீரில் தமிழ்நாட்டில் கூட இருக்கின்றன.
ஆனால் வடக்கில் இப்போது வீதித் தடைகள் இல்லை. சுற்றிவளைப்பு தேடுதல்கள் இல்லை.

நாங்கள் சட்டம் ஒழுங்கு பணியை காவல்துறையிடம் ஒப்படைத்து விட்டோம். தமிழ்க் காவலர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இராணுவ ஆட்சேர்ப்பை நிறுத்தியுள்ளோம். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவோரால் ஏற்படும் வெற்றிடங்களைக் கூட நாங்கள் நிரப்பவில்லை.

போரில் வெற்றியைப் பெற்றுத் தந்த படையினரை நாம் திருப்பி அனுப்ப முடியாது. மீண்டும் கடந்த காலத்துக்குத் திரும்பாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க இராணுவத் தலையீடு இருக்கும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment