இந்தியாவை தமக்கு ஆதரவாக செயற்பட வைக்க இலங்கை கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் ஜெனீவா பிரேரணையின் போது இந்தியா தமக்கே ஆதரவளிக்கும் என்று இலங்கையின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவில் வைத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தநிலையில், உடனடியாக புதுடில்லி நிர்வாகம் இந்த விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்காது என்று இந்திய உயர் ஸ்தானிகர் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில், இந்தியாவுக்கு வழங்கிய பல உறுதிமொழிகளை அது நிறைவேற்றவில்லை.
பெரும்பாலும் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் ஒரு ஜோக்கரைப்போல நடந்துகொள்கிறது. இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை காப்பாற்றப்படவில்லை.
மறுபுறத்தில் அவர் சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் அதிகப்படுத்தி வருகிறார். இது இந்திய பாதுகாப்புக்கு பாரிய குந்தகத்தை ஏற்படுத்தும் என்று அச்சம் இந்தியாவிடம் உள்ளது.
இதன்காரணமாக மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முடிவெடுத்து அதன் மூலம், பிரேரணை தோற்கடிக்கப்படுமானால் மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு இன்னும் வசதி வாய்ப்புகளை இலங்கையில் ஏற்படுத்திக் கொடுத்துவிடுவார் என்று அச்சமும் இந்தியாவிடம் உள்ளது.
இந்தவேளையில் தமிழர் பிரச்சினைக்காக இலங்கையில் வைத்து சீனாவுடன் முரண்பட இந்தியா விரும்பவில்லை.
எனவே, ஜெனீவா பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படுவதாக கூறப்படும் மார்ச் 23 ஆம் திகதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே இந்தியா தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்தியா, இலங்கை தமிழர்களுக்கு வாய்ப்பாகவோ அல்லது சிங்கள மக்களுக்கு வாய்ப்பாகவோ முடிவுகளை மேற்கொள்ளாது தமது நாடு நலன் சார்ந்த முடிவையே இந்த விடயத்தில் எடுக்கும் என்று அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
அதுவரையில் இலங்கை அரசாங்கம், இந்தியா தொடர்பில் எதிர்ப்பார்ப்புக்களை மாத்திரமே கொண்டிருக்கமுடியும் என்றும் தமிழ் அரசியல் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment