Thursday, February 23, 2012

ஈழப்போராட்டத்தைக் கருவறுக்கத் தொடங்கிய தினம் இன்று...!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆட்சியிலிருந்த சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டு இன்றுடன் பத்தாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.

கடந்த 2002ம் ஆண்டு சிறிலங்காப் பிரதமராக இருந்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே நோர்வே நாட்டின் அனுசரணையில் சமாதான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.



அதன்மூலம் தமிழர் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளில் பொருளாதாரத்தடைகள் நீக்கப்பட்டதுடன் தெற்கையும் யாழ்ப்பாணத்தையும் நீண்டகாலம் பிரித்து வைத்திருந்த ஏ9 கண்டி வீதி திறக்கப்பட்டது. தமிழ் மக்கள் சமாதானக் காற்றை சுவாசிப்பதாக பெருமூச்சு விட்டுக்கொண்ட நாளாக அது அமைந்தது.

போரினால் சிதைவுற்றிருந்த வன்னிப்பெருநிலப்பரப்பு போர்க் காயங்களை மாற்றுவதற்கு மருந்து அளிக்கப்பட்டது. காடுகள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் நிறுவப்பட்டது. பலவகையான வாகனங்கள் வன்னியை அடைந்த காலம். போராளிகள் விடுப்பில் வீடு வந்து தமது பெற்றோறை சந்தித்து மகிழ்ந்து கழித்த காலம்.

அதேநேரம், தமிழ் மக்களுக்காக போராட்டம் மேற்கொண்ட புலிகளை பலமிழக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை ரணில் அரசு மேற்கொண்டு அதன் மூலம் கிழக்குத் தளபதி கருணாவை பிரித்து தமிழீழப் போராட்டத்தில் பெரியதொரு தாக்கத்தை வழங்கியதன் ஊடாக தமிழ் மக்களின் இன்றைய சூழலுக்கு வித்திட்ட  இவ் ஒப்பந்தம்,தமிழீழ மண்மீட்புப் போராட்டத்தை நசுக்குவதற்கு சிங்களம் மேற்கொண்ட 'மெல்லக் கொல்லும் நஞ்சு' நடவடிக்கையாக இவ் ஒப்பந்தம் அமைந்தது.
அவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பத்து ஆண்டுகள் கழிந்துள்ளன. சமாதான உடன்படிக்கை மூலமாக எம் மக்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளை விட அதன் மூலம் எம் மக்கள் சந்தித்த துன்ப துயரங்கள் இன்றும் சாட்சியாக நிற்கின்றன. எனினும் எம் மக்களின் மனதிலிருந்து அந் நாளை எளிதில் மறந்துவிட முடியாது என்பதே நிதர்சனம்.

No comments:

Post a Comment