Thursday, February 23, 2012

மகிந்தவின் ஏமாற்று நாடகங்கள் எதுவரை?

சர்வதேசத்தை ஏமாற்ற காலத்திற்கு காலம் பல்வேறு குழுக்களை அமைத்துவரும் சிறீலங்காவின் புதிய அவதாராகமாக பிறப்பெடுத்துள்ளது ‘இராணுவ நீதிமன்றம்’. போர் நிறைவடைந்ததன் பின்னர் சர்வதேச அழுத்தங்கள் எழுந்தபோது நல்லிணக்க மற்றும் கற்றுக்கொண்ட ஆணைக்குழு ஒன்றை மகிந்த அமைத்து காலத்தை ஓட்டிவந்தார்.

தங்களது நிபுணர் குழுவின் அறிக்கையைக்கூடக் கிடப்பில் போட்டுவிட்டு, மகிந்தவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்பார்த்து இலவுகாத்த கிளியாகக் காத்துக்கிடந்தது ஐ.நா. ஆனாலும் மகிந்த காலத்தை இழுத்தடிப்பதைப் புரிந்துகொண்ட, மனித உரிமை அமைப்புக்களும், மேற்குலக நாடுகளும் உடனடியாக அறிக்கையை வெளியிடவேண்டும் என்று அழுத்தம் போட்டன. வேறுவழியின்றி மகிந்தவும் அறிக்கையை வெளியிட்டுவைத்தார்.

மகிந்தவின் நல்லிணக்கத்தின் ஊடாக பொன் முட்டை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு வெறும் கூழ் முட்டையே கிடைத்தனால் வெறுத்துப்போனார்கள்.
சர்வதேசத்தின் முகச்சுழிப்பைச் சமாளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நாடகத்தை அரங்கேற்றினார் மகிந்த. வெட்டித்தனமான பேச்சு என்பதை காலம் கடந்து உணர்ந்துகொண்டு விலகிக்கொண்டது கூட்டமைப்பு.

அடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து காலத்தை இழுத்தடிக்க மகிந்த முயன்றார். நாடாளுமன்றத் தெரிவிக்குழுவிற்குள் கூட்டமைப்பும் இருந்ததால்தான் சர்வதேசத்தை ஏமாற்றுவது சுலபம் என்று நம்பிய மகிந்த, கூட்டமைப்பை இழுக்க பல வலைகளையும் வீசினார். மகிந்தவின் வலைக்குள் விழப்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிலரையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றிவிட்டனர் தமிழர்கள். கூட்டமைப்பு விழுந்தால்தான் தாங்களும் விழுவோம் என்றது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி. இதனால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்ற நாடகம் அரங்கேறாமலேயே அடங்கிப்போனது.

இந்த நிலையில்தான் ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமாகின்றது. இந்த மாநாட்டிற்கு முன்பாக சர்வதேசம் நம்பும் வகையில் எதாவது விசாரணைக்குழுவை அமைப்பதற்கு மகிந்த எடுத்த முயற்சிகள் எவையும் கைகூடவில்லை.  இதற்குள் அமெரிக்கா வேறு தனது பிரிதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி மகிந்தவை அச்சுறுத்திக்கொண்டிருந்தது. போருக்கு உதவினால் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவேன் என்ற மகிந்த, போர் முடிவடைந்து ஆண்டுகள் மூன்றாகின்ற நிலையிலும் தீர்வொன்றையும் வழங்காது காலத்தை இழுத்தடிப்பதை சர்வதேசம் விரும்பவில்லை என்பதை இலங்கைக்குப் படையெடுக்கும் இராஜதந்திரிகளின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த நிலையில்தான் தற்போது மகிந்தவின் இராணுவ நீதிமன்றம் தோற்றம்கொண்டுள்ளது.

2010ம் ஆண்டு நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் அதில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் (ஆசியா 13, ஆபிரிக்கா 13, தென் அமெரிக்கா 8, ஐரோப்பா 13 அங்கத்துவங்களைக் கொண்டுள்ளன) 27 நாடுகளின் ஆதரவைப் பெற்று மகிந்த அரசு தப்பித்துக்கொண்டது. 2011ம் ஆண்டும் தனக்கெதிராக எவ்விதப் பிரேரணையும் கொண்டு வரப்படாமல் இருப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வெற்றியும் பெற்றது. ஆனால் இம்முறை அது சாத்தியமாகாது என்பதை மகிந்த புரிந்துகொண்டுள்ளபோதும், தன்னைப் பாதுகாப்பதற்கு கடும் பிரயத்தனங்களை எடுத்துள்ளார்.

ஆனால், இம்முறை மகிந்தவிற்கு சாதகமாக இருக்காது என்பதே அமெரிக்கா முதல் ஐரோப்பா வரை ஒலிக்கின்ற குரல்கள் உறுதிப்படுத்துகின்றன. மகிந்தவின் சர்வதேசத்தை ஏமாற்றும் நாடகம் ஒரு முடிவு கட்டத்தை நெருக்கிக்கொண்டிருக்கின்றது என்றே நம்பலாம். மகிந்தவின் சிந்தனை இப்போது சிங்களத்தின் நிந்தனையாக மாறிக் கொண்டிருக்கின்றது. மகிந்தவைத் துட்டகைமுனுவாகத் தூக்கிவைத்திருந்தவர்கள் இப்போது மகிந்தவிற்கு எதிராக போராடவும் தயாராகிவிட்டார்கள். சர்வதேசத்தின் அழுத்தம் ஒருபுறம், தனது மக்களின் போராட்டம் மறுபுறம் என இரு பக்கங்களாலும் அடிவாங்கத் தொடங்கியுள்ளார் மகிந்த.

சிங்கள தேசத்தின் மீது சர்வதேசம் கொடுக்கப்போகும் அழுத்தங்களையும், மகிந்த ஆட்சியின் மீது சிங்கள தேசம் ஏற்படுத்தப்போகும் அதிர்வுகளையும் தமிழர் தலைமைகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளவேண்டும். அதற்கேற்ற வகையில் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான காய்களை நகர்த்தவேண்டும். மிகவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு சார்பாக கனிந்துவரும் இந்தக் காலத்தைத் தவறவிட்டால், இன்னொரு வாய்ப்புக்காக மீண்டும் நீண்டகாலம் காத்திருப்பது தவிர்க்கமுடியாமல் போய்விடும்.

நன்றி : ஈழமுரசு
ஆசிரியர் தலைப்பு

No comments:

Post a Comment