Tuesday, February 28, 2012

கூடங்குளம் விவகாரம்: மாநில அரசு குழு இன்று அறிக்கை தாக்கல்


Kudankulam Power Plant
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு இன்று முதல்வர் ஜெயலலிதாவிடம் அறிக்கையை சமர்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்த முதல்வர்
ஜெயலலிதா கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு சார்பில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றார். அதன்படி கடந்த 9ம் தேதி அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர் எஸ்.இனியன், அணுமின் சக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக இயற்பியல் துறை பேராசிரியர் அறிவு ஒளி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எல்.என்.விஜயராகவன் ஆகிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இனியன் தலைமையிலான இந்த குழுவினர் கடந்த 18ம் தேதி கூடங்குளம் சென்று ஆய்வு செய்தனர். அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆய்வை முடித்துக் கொண்டு கடந்த 20ம் தேதி சென்னை திரும்பினர். ஆய்வறிக்கையை தயார் செய்துள்ள இந்த குழுவினர் இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அறிக்கையை அளிப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment