Tuesday, February 28, 2012

நாராயணசாமி ஆதாரங்களை நீதிமன்றில் நிரூபிக்கட்டுமே : எஸ்.பி.உதயகுமார்

Tuesday, 28 February 2012 00:33 அமைச்சர் நாராயணசாமி தம் மீது கூறிவரும் குற்றச்சாட்டுக்களை தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றில் நிரூபிக்கட்டும் என கூடங்குளம் எதிர்ப்பாளர்கள் குழுவினரின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி. உதயகுமார் தெரிவித்தூள்ளார்.
IDEA நிறுவனம் நடத்திய இரு பொது சர்வதேச கூட்டங்களில் மாத்திரமே தாம் பங்கேற்றிருப்பதாகவும், வேறெந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ள
அவர், தன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள நாராயணசாமி, பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக ஓரிரு நாட்களில் வழக்குரைஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகவும் கூறினார்.
தமிழக முதல்வரின் நிலைப்பாடு குறித்து அவர் பேசுகையில், 'கூடங்குளம் விவகாரத்தில் உள்ளூர் மக்களின் திருப்திதான் முக்கியம் என்று முதல்வர் ஜெயலலிதா கடைசியாக விடுத்த அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார். கூடங்குளம் அணு உலையைத் திறந்தால்தான் மின்வெட்டு நீங்கும் என்று அவர் கூறவேயில்லை. மின்தட்டுப்பாட்டை போக்க மாற்றுத் திட்டமுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் உடன்குடியில் அனல் மின் நிலையத் திட்டத்தைச் செயல்படுத்த முன் வந்துள்ளார் முதல்வர். எனவே தமிழக அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது' என தெரிவித்தார்.
இதேவேளை கூடங்குளம் போராட்டத்திற்கு 1500 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். 99 சதவீத மக்கள் அணுஉலையை திறக்கவே ஆதரவு தெரிவிக்கின்றனர் என அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது எனவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment