Wednesday, February 15, 2012

ஊழல் மூலம் உலகை அசர வைத்தவர்: கருணாநிதி


தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நான் அறிவித்த மறுவாழ்வுத் திட்டத்தை விமர்சித்தவர், ஊழல் மூலம், உலகத்தை அசர வைத்த, ஒரு கட்சியின் தலைவர்,” எனக் குறிப்பிட்டு, தி.மு.க., தலைவருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுப் பட்டம் சூட்டியுள்ளார்.

ஸ்ரீரங்கம் தொகுதி, திருவானைக்காவலில் நேற்று நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:கடந்த
சட்டசபைத் தேர்தலின் போது, ஸ்ரீரங்கம் தொகுதியில் பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்திருந்தேன். பெருவாரியான ஓட்டுகள் பெற்று, மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற பின், ஜூன் மாதம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தவுடன், 190 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, அடிக்கல் நாட்டினேன்.
தற்போது இரண்டாவது முறையாக உங்களை சந்தித்து, 240 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குவதில் மனநிறைவு அடைகிறேன். ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு. மக்களுக்கு இடர்ப்பாடுகள் ஏற்படும் போதெல்லாம், ஓடோடிச் சென்று அவர்களின் துயர் துடைக்கும் அரசு.

அவ்வகையில், “தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளுக்காகவும், சேதமடைந்த கட்டமைப்புகளின் உடனடி சீரமைப்புக்காக, 850 கோடி ரூபாயை வழங்கி, போர்க்கால அடிப்படையில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது.அனைவரும் அசந்து போகும் அளவுக்கு, 790 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஐந்தாண்டுகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை, சட்டசபையில் அறிவித்தேன். இத்திட்டத்தை, அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டி, வரவேற்றுள்ளன. ஆனால், அதை விமர்சிக்கும் வகையில், “அசந்து தான் போனார்கள்’ என்ற தலைப்பில், “அசடு’ வழியும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், “ஊழல் மூலம் உலகத்தை அசர வைத்த’ ஒரு கட்சியின் தலைவர். தரமானவர்களின் தரமான விமர்சனத்தை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அரசின் நல்ல திட்டங்களை பாராட்ட மனமில்லாமல், விமர்சிக்க வேண்டும் என்ற வெறியுடன், குறை கூற வேண்டும் என்ற ஒரே நோக்குடன், விமர்சிக்கும் விமர்சனங்களை புறந்தள்ளுவதை விட வேறு வழி இல்லை. யார் போற்றினாலும், தூற்றினாலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.

“தமிழ்நாட்டின் வளர்ச்சி, தமிழ் மக்களின் வளர்ச்சியே என்னுடைய வளர்ச்சி’ என்ற முறையில், நான் தொடர்ந்து பணியாற்றுவேன். என்னை பொறுத்தவரை, நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் வளர்ச்சியாக இருக்க வேண்டும்.எனவே தான், ஏழை மக்கள் உடனடியாக பயன் பெறும் வகையில், எவ்வித விலையும் கொடுக்காத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. அதே நேரத்தில், ஏழை, எளிய மக்கள், அரசின் நலத்திட்டங்களை மட்டும் சார்ந்து இல்லாமல், அவர்கள் சொந்த காலிலேயே நிற்கும் வகையில், பொருளாதார வளத்தை, அவர்கள் பெற வேண்டும் என்பதே, இந்த அரசின் முக்கிய குறிக்கோள்.அதனடிப்படையில், குடும்ப அளவில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டங்களான, விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும், அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

என்னால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக தீர்க்க வழி வகை செய்வதுடன், தங்களின் தேவைகளை, தாங்களே பூர்த்தி செய்து கொள்ள தீட்டப்பட்ட திட்டங்கள்.முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசின் ஆட்சிக் காலத்தில் தீட்டப்பட்ட திட்டங்கள் எல்லாம், மக்களின் வருவாயை பெருக்குவதற்கு பதிலாக, அவர்களின் குடும்ப வருவாயை பெருக்கும் திட்டங்களாக அமைந்தன. இலவச, “டிவி’ திட்டம், அவர்களின் குடும்ப, “டிவி’ சானல்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையிலேயே அமைந்தது.அதாவது, அரசு செலவில் அவர்கள், தங்கள் குடும்ப வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொண்டனர். ஆனால், என் தலைமையிலான அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

பட்டினத்தார் கதை: விழா மேடையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, பட்டினத்தார் கதை மற்றும் கொக்கு கதைகளை எடுத்துக் கூறினார். “புத்தர் போன்று பெரிய செல்வந்தராக இருந்து, துறவறம் பூண்ட பட்டினத்தாரை, தலை சுற்ற வைக்கும் அளவுக்கு, இருவர் விமர்சனம் செய்தனர். அவர்களைப் போல விமர்சனம் செய்யும் கருணாநிதியின் விமர்சனத்தை புறந்தள்ள வேண்டும்’ என்றார்.

தந்திரத்தால் உயிரிழந்த கொக்கு:கருணாநிதியின் குணத்தை விளக்குவதற்காக, கொக்கு கதை ஒன்றையும் முதல்வர் கூறினார். அவர் கூறியதாவது:குளத்தில் இருந்த மீன்களை, மறைந்திருந்து பிடிப்பதில், சிரமமடைந்த கொக்கு ஒன்று, “விரைவில் குளம் தூர்ந்து விடும். அருகில் உள்ள குளத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்’ என்று கூறி, மீன்களை ஏமாற்றி, அருகில் உள்ள பாறையில் வைத்து தின்றது.ஒரு நாள் குளத்தில் இருந்த நண்டு ஒன்று, அந்த குளத்தைப் பார்க்க வேண்டும் என, கொக்கின் கழுத்தில் தன் கொடுக்கின் உதவியுடன் தொங்கியது. பாறையில் ஏராளமான மீன் முள்களைக் கண்டதும், கொக்கின் தந்திரத்தை புரிந்து கொண்ட நண்டு, அதன் கழுத்தை இறுக்கிக் கொன்றது. இந்த கொக்கை போன்று, சுயநலம் கொண்டது தான் தி.மு.க., அரசு.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா, கொக்கு கதை கூறினார்.

No comments:

Post a Comment