Friday, March 16, 2012

போர்க்குற்றங்களைச் செய்யும் உரிமை சிறிலங்கா அரசுக்கு இல்லை – சனல் 4 ஆவணப்படத்தில் மில்லிபான்ட்


போர்க்குற்றங்களை செய்வதற்கு சட்டபூர்வமாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒரு அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மல்லிபான்ட் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றுமுன்தினம் இரவு ஒளிபரப்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற ஆவணப்படத்தில் கருத்து வெளியிட்டுள்ள போதே டேவிட் மில்லி பான்ட் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த ஆவணப்படத்தில் கருத்து வெளியிட்டுள்ள டேவிட் மில்லிபான்ட்டும், ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான முன்னாள் உதவிச்செயலர் ஜோன் ஹோம்சும், “எந்த விலை கொடுத்தாலும், இறுதிப்போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக இருந்தது“ என்று குறிப்பிட்டுள்ளனர்.

போர் வலயத்தில் சிக்கியிருந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்பத் தவறியது உள்ளிட்ட சில சம்பவங்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் மற்றும் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட சிறிலங்கா இராணுவத்தரப்பை இந்த ஆவணப்படம் குற்றம்சாட்டியுள்ளது.

“போரின்போது விடுதலைலைப் புலிகளால் போர்க்குற்றங்கள் புரியப்பட்டன. அதற்காக, ஒரு சட்டபூர்வமான அரசாங்கத்துக்கு அதுபோன்று செய்வதற்கு உரிமை கிடையாது.“ என்று டேவிட் மில்லிபான்ட் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment