Sunday, March 04, 2012

போர்குற்ற விசாரணை தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி பேரணி!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் 3.3.2012 அன்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. எழும்பூர் இராஜரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்டு காந்தி இர்வின் பாலத்தில் முடிவடைந்த இந்தப் பேரணியை இயக்குனர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். பேரணியில் தமிழின உணர்வாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். 

பேரணிக்குப் பிறகு மாலை 6 மணிக்கு புரசைவாக்கம், தாணா தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் கோரிக்கை உரை நிகழ்த்தினார்.


இப்பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு. சீமான் கூறியபோது,

ஈழ மக்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறைக்கு இந்திய அரசு பக்க பலமாக இருக்கிறது. இது நிறுத்தப்படவேண்டும். தமிழ்நாட்டு அரசைப்பொறுத்தவரை அவர்கள் எங்கள் கோரிக்கையை செவிசாய்க்க ஆரம்பித்துள்ளார்கள். இது நமக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் இந்திய மத்திய அரசும் இதை ஏற்றுக்கொண்டால், கொடுங்கோலன் இராஜபக்சே அரசை நாம் முற்றிலுமாக நிராகரிக்கலாம், நாம் இங்கும் எழுப்பும் உரத்த ஒலிகள் கடல் தாண்டி இருக்கும் இராசபக்சே அரசின் காதுகளில் ஊசியென பாயவேண்டும் என்றார்.

எழும்பூர் இராசரத்தினம் மைதானத்தில், அலைகடலென திரண்ட மாபெரும் மக்கள் கூட்டத்தில், நாகை, திண்டுக்கல், காஞ்சிபுரம்,திருவள்ளூர் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் இருந்தும், மற்றும் மகளிர் பாசறையை சேர்ந்தவர்களும் என வயது வேறுபாடின்றி மக்கள் திரண்டு இலங்கை அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இன்னும் ஒரு முறை இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் தெரிவிப்போம் என்ற சப்தத்தோடு இப்பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். பலத்த காவல் துறையினரின் பாதுகாப்போடு நடத்தப்படும் இப்பேரணி மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment