அபிவிருத்தி நடவடிக்கை என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடமிருந்து பெருமளவு நிதியை கடனாக பெற்றுள்ளமையினால்,
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
குறிப்பாக,ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-மாத்தறை புகையிரத பாதை அமைப்பு, கொழும்பு-கட்டுநாயக்கா நெடுஞ்சாலை நுரைச்சோலை அனல் மின்நிலைய நிர்மாணம், மேல் கொத்மலை நீர் மின்நிலைய விரிவாகம் உள்ளிட்டபல்வேறு நிர்மாணப்பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடமிருந்து பலாயிரக்கணக்கான கோடி ரூபாவினை கடனாக பெற்றுள்ளது.
இதற்கான கடனுதவிகள் சீனா, இந்தியா,ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் ஜப்பானிடமிருந்து 40,557 மில்லியன் ரூபாவினை கடனாக பெறவுள்ளது.
இந்த கடனுதவியை பெறுவதற்கான அங்கீகரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளதாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறியுள்ளார்.
இவ்வாறு, தொடர்ச்சியாகப் பெறப்படும் கடன்களினால் நாடு எதிர்காலத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கும் என எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன.
No comments:
Post a Comment