Friday, March 09, 2012

ஜெனீவாவில் தமிழர்கள் – நேற்றைய நிலவரம்


தமிழீழ உறவுகளின் துயர்துடைக்கக் கோரி, ஐ.நா. விடம் நீதி கேட்டு நடைபெற்ற நடைப்பயணத்தின் முடிவிடமான ஜெனீவா நகரின் முருகதாசன் திடல், நேற்று (05.03.2012) மாலை தமிழீழ உறவுகளின் எழுச்சி  அடையாளமாய்ப் பொங்கிப் பிரவாகித்தது. ஐரோப்பாவின் பலநாடுகளிலிருந்தும் திரண்டு வந்த தமிழீழஉறவுகள், தமது ஆதரவுக்கரங்களின்  அடையாளத்தோடு, ஐ. நா முன்றலைப் பேரணியாய் வந்தடைந்து, தமது நியாயக்கோரிக்கைகளை ஐ.நா விடம் முன்வைத்தனர்.


எழுச்சி நிகழ்வினை ஆரம்பித்து வைப்பதற்காக, அனைத்து ஐரோப்பிய நாடுகளினதும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர்களும் இணைந்து பொதுச்சுடரை ஏற்றிவைக்க, தமிழீழத்தேசியக்கொடியை சுவிஸ் நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப்பொறுப்பாளர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து நெதர்லாந்து நீதிமன்றில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மேல் சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டுக்களுக்கெதிராக வாதாடி வெற்றியைப்பெற்றுத்தந்த வழக்குரைஞர் அவர்களின் சிறப்புரை நடைபெற்றது.  தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களின் சிறப்புப்பற்றி விளக்கமாக எடுத்துரைத்த அவர், மக்கள் எப்போதும் அவர்களுடன் இணைந்துநின்று போராடுவதில், எந்த நாட்டினது அரசாங்கமும் இனிமேல் குற்றம்காண முடியாதென்றும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுக்களின் செயற்பாடுகள், பயங்கரவாதச் செயற்பாடுகள் அல்லன என்பதை,  ஐரோப்பிய நீதிமன்றங்கள் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்ளும் காலம் கனிந்துவிட்டதென்றும் கூறி உரையை நிறைவு செய்கையில், தமிழீழ உறவுகள்  தமது மகிழ்வை வெளிப்படுத்தும் வகையில் தேசியக்கொடியை உயர்த்திப்பிடித்தபடி ஆரவாரம் செய்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது.
தொடர்ந்து உரையாற்றிய பிரான்ஸ் நாட்டின் கட்சி உறுப்பினர்கள், மற்றும் பிரமுகர்கள் ஆகியோரின் கருத்தும் தமிழீழ மக்களின் எழுச்சிக்கு உறுதிதரும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நடைப்பயணத்தை மேற்கொண்ட உறவுகளின் உரையின் ஒவ்வொரு அங்கமும், தேசியக்கொடியின் அவசியம் பற்றியும், தமிழீழப் போராட்ட வரலாற்றின் உண்மை பற்றியும் சிறப்பாக வெளிக்கொணரும் வகையில் அமைந்திருந்தது. பிரித்தானிய நாட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்ட திரு.பரமேஸ்வரன் அவர்கள், ´´ஐ.நா. கட்டிடத்திடம் நான் உரிமை பற்றிப் பேசப்போகிறேன்´´ என்ற வகையில் ஆற்றிய உரை, இனிமேல் எமக்கு நீதி கேட்பதற்கு இம்மண்ணில் எவரும் இல்லை என்பதை எடுத்துரைத்தது.
எழுச்சி நிகழ்வாக, யேர்மனியக் கலைபண்பாட்டுக் கழக நடனக்குழுவினரின் நடன நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஐ.நா விடம் சமர்ப்பிக்கப்பட்ட ஐந்து அம்சக்கோரிக்கைகளின் உறுதி மொழியுடன், நிகழ்வு  17.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.
எழுச்சிப் பேரணியில் அனைத்து நிகழ்வுகளையும், மீண்டும் எழுச்சியுடன் செயற்பட ஆரம்பித்திருக்கும் TTN தமிழ்ஒளி ஒளிபரப்புக்கூடம் நேரடி அஞ்சல் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment