Friday, March 09, 2012

அணு உலையால் பாதிக்கப்பட்ட சப்பானியர் இந்தியாவில் பேசத்தடை


Koodankulam
கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 11ம் தேதி கூடங்குளத்தை அடுத்த ராதாபுரத்தில் பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக போராட்ட தலைவர் உதயக்குமார் அறிவித்திருந்தார்.
இதில் ஜப்பானைச் சேர்ந்த பெண் ஒருவர் பங்கேற்று ஃபுகுசிமா அணுஉலை விபத்து குறித்த அவரது நேரடி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பொதுக் கூட்டம் நடத்த உள்ளூர் போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். அதனால் இடிந்தகரையில் பொதுக் கூட்டத்தை நடத்த உதயக்குமார் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டை மீறி ஜப்பான் பெண் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள் விசாவில் வருபவர்கள் இந்தியாவில் நடைபெறும் போராட்டம், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்க கான்பரனஸ் விசா தரப்படுகின்றது. இந்த விசாக்களின் மூலம் அரசு சார்ந்த, பெரும் வணிகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
ஆனால் சமீபகாலமாக வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வரும் பலரும், இங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சிகள், அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் ஜெர்மனைச் சேர்ந்த ஹெர்மன் என்பவர் சிக்கினார்.
இதேபோல கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்க உள்ள ஜப்பான் பெண்ணின் விசா குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தினர் விசாரித்தனர். இதில் இந்தியாவில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு விசா அளிக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றால் உடனடியாக கைது செய்யப்பட்டு, சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவார் என்று தெரிகின்றது.
கூடங்குளத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டவருக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் சுற்றுலா விசா குறித்த விவரங்களை பதிவு செய்து, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment