Friday, March 16, 2012

இன-மதவாதத்தை முன்னிறுத்தி நாடுகளிடையே ஆதரவினைத் திரட்ட இலங்கை முயற்சி! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Deluxon_Morris ஐ.நா மனித உரிமைச் சபையில் நாடுகளின் ஆதரவினைத் திரட்ட, இன, மதவாதத்தை  இலங்கை முன்னிறுத்தி ஆதரவினை திரட்ட எத்தனிப்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைச் சபையில், இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையினை தோற்கடிக்க, இலங்கை கடுமையான முயற்சிகளை ஐ.நாவுக்கு வெளியேயும், உள்ளேயும் மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக ஆபிரிக்க நாடுகளிடத்தில் அமெரிக்காவின் பிரேரணையானது கறுப்பினத்தவர் மீதான வெள்ளை இனத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் முயற்சியென்றும், இஸ்லாமிய நாடுகளிடத்தில் அமெரிக்க எதிர்ப்பு மதவாதத்தை முன்னிறுத்தவும் அமெரிக்க, இலங்கை அரச தரப்பு கருத்துருவாக்க பரப்புரையாக உள்ளது.
சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையில் நின்றவாறு, ஈழத்தமிழனத்தின் மீது இனவழிப்பை மேற்கொள்ளும் இலங்கை அரசு, இன, மதவாதங்களுடாக, சர்வதேச அரங்கில் தன்னை தக்கவைக்க முனைகின்றது எனவும் அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்கு பயணங்களை மேற்கொண்ட இலங்கை தரப்பு, தங்களுக்கான ஆதரவினை அந்தந்த நாடுகள் பலவற்றில் கோரியிருந்த போதும், இன்று அந்த நாடுகளில் பல, தமிழர்களின் நியாயமான போராட்டத்தை புரிந்துள்ளதோடு, இலங்கை அரசினது குற்றங்கள் தொடர்பில் அறிந்து கொண்டவர்களாக உள்ளமை உணரக்கூடியதாக உள்ளதென்பது, ஆறுதல் அளிக்கும் விடயமாக உள்ளதென அமைச்சர் டிலக்சன் மொறிஸ் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபை விவகாரங்களுக்கான வள அறிஞர் குழுவானது, தொடாந்தும் தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க ஐ.நா மனித உரிமைச் சபைக்குள்ளேயும், வெளியேயும் இராஜதந்திரச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் டிலக்சன் மொறிஸ், இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தை, ஐ.நா மனித உரிமைச் சபைக்கு வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
Posted by SankathiWPadmin on March 16th, 2012 

No comments:

Post a Comment