Friday, March 16, 2012

இந்தியாவின் சிறிலங்கா சார்புக்கொள்கைக்கு எதிர்ப்பு வலுக்கின்றது – அமெரிக்க ஊடகம்

Indo-lanka flagesஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவானது தனது அழுத்தங்களை மேற்கொள்ளவுமில்லை.

இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட The Wall Street Journal ஊடகத்தின் வெளியீடுகளில் ஒன்றான India Real Time வெளியீட்டில் [March 13, 2012] Tom Wright எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
அதன் முழுவிபரமாவது,
சிறிலங்காவில் 26 ஆண்டு காலமாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009ல் இறுதிக்கட்டத்தை அடைந்த வேளையில், தமிழ்ப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், 12 வயதே நிரம்பிய அவரது மகனும் சிறிலங்காப் படைகளால் படுகொலை செய்யப்பட்டனர் என பிரித்தானிய தொலைக்காட்சி சேவையின் ஆவணப்படமானது குற்றம்சுமத்துவதானது, இந்தியா தனது அயல்நாடு மீது கொண்டுள்ள நடுநிலைமையை அடிப்படையாகக் கொண்ட அதன் வெளிநாட்டுக் கொள்கையை பரிசோதிப்பதாக உள்ளது.
பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சியில் புதனன்று ஒளிபரப்பப்படவுள்ள புதிய ஆவணப்படத்தில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலில் பல காயங்கள் இருப்பதை மிகத் தெளிவாக, துல்லியமாகக் காண்பிக்கும் கானொலிக் காட்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்திய ஊடகங்கள், படுகொலை செய்யப்பட்ட குறித்த 12 வயதுச் சிறுவனின் ஒளிப்படங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, செவ்வாயன்று நாடாளுமன்றில் கூடிய தமிழ்மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட இந்தியாவின் தென்பகுதியைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், மீளிணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக உள்ள இவ்வாறான படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் சிறிலங்கா மீது இந்திய மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியப் பிரதமரான மன்மோகன் சிங், சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருங்கிய, பலமான உறவைப் பேணவேண்டும் என முயற்சி செய்துவரும் அதேவேளையில், தனது கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இந்திய தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்.
யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா மீது நம்பகமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்கா உள்ளடங்கலாக பல அனைத்துலக அரசாங்கங்கள் தமது அழுத்தங்களை அதிகரித்து வரும் இந்நிலையில், இந்திய ஆட்சியாளர்கள் இது வரை காலமும் இது விடயத்தில் அமைதிகாக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும், தமிழ்ப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்களை மிகச் சரியான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் கோரி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ள முன்மொழிவுக்கு அமெரிக்காவானது தனது ஆதரவை வழங்கிவருகிறது.
இது வரை இந்தியாவானது இப்முன்மொழிவுக்கு வாக்களிப்பது தொடர்பில் எந்தவொரு பதிலையும் வெளியிடவில்லை, ஆனால் இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கமானது தொடர்ந்தும் அமைதி காப்பதானது அதன் பலவீனத்தை காட்டுவதாக உள்ளது.
ஜெனீவாவில் அமெரிக்காவால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு இந்திய மத்திய அரசாங்கம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என இந்திய அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சியும் தமிழர் கட்சியுமான திராவிட முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
“தமிழ் சமூகத்தின் கோரிக்கைகள் புரிந்துணர்வு அடிப்படையில், உண்மையான நகர்வின் மூலம் தீர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை” சிறிலங்கா அரசாங்கம் உணரத்தக்க வகையில், இந்திய மத்திய அரசாங்கமானது தனது அழுத்தத்தை மேற்கொண்டு வருவதாக திரு.சிங், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதிக்கு அனுப்பிய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமரால் அனுப்பப்பட்ட பதில் மடலைப் பார்க்கும் போது, இந்தியாவானது ஐ.நாவில் முன்வைக்கவுள்ள முன்மொழிவுக்கு தனது ஆதரவை வழங்கமாட்டாது போல் தெரிகின்றது. இந்தியா இவ்வாறான தீர்வை எட்டினால், அரசாங்கத்திற்கும் சிறுபான்மை தமிழ் சமூகத்துக்கும் இடையில் இது ‘மிக ஆழமான முரண்பாட்டையும் அவநம்பிக்கையையும் தோற்றுவிக்கும்’ எனக் கருதப்படுகிறது.
சிறிலங்கா அரசாங்கமானது சனல் 04 தொலைக்காட்சி சேவையின் குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்துள்ளது. “எமது பார்வையில், இவ் ஆவணமானது போலியானது, ஆழமாக ஆராயப்படாது தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணமாக இருப்பதுடன், உறுதிப்படுத்தப்படாத பல காட்சிகளைக் கொண்டுள்ளது” என இந்தியாவுக்கான சிறிலங்காத் தூதர் பிரசாத் கரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றுக்கான அமெரிக்காவின் கீழ்நிலைச் செயலர் மரியா ஒற்றெறோ கடந்த மாதம் சிறிலங்காவுக்கான தனது பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையில், “அமெரிக்காவானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள முன்மொழிவுக்கு தனது ஆதரவை வழங்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
சிறிலங்காவில் முப்பது ஆண்டுகாலமாக தொடரப்பட்ட யுத்தத்தில் 60,000 வரையிலான மக்கள் கொல்லப்பட்டனர். 2009 ஜனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் சிறிலங்காவின் வடக்கில் 13.5 சதுர கிலோமீற்றர் பரப்பளவான பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட போரிலேயே இதில் அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இறுதியில் மே 2009ல் சிறிலங்கா அரசாங்கப் படைகள் தமிழ்ப் புலிகளைத் தோற்கடித்ததுடன் அதன் தலைவர் திரு.பிரபாகரனையும் படுகொலை செய்தது.
ஒரு ஆண்டு காலத்திற்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு, சிறிலங்காவில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பல மீறல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், குறிப்பாக யுத்தத்தின் இறுதி மாதங்களில் பல பத்தாயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் தமது உயிர்களை இழப்பதற்கு இவ்விரு சாராரும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தமது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சிறிலங்கா அரசாங்கமானது யுத்த கால மீறல்கள் தொடர்பாக முழுமையான விசாரணை செய்வதற்கான அனுமதியை வழங்க மறுத்து வருவதாகவும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக ஐ.நா வானது சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
ராஜபக்ச அரசாங்கமானது இந்த அறிக்கையை நிராகரித்துடன், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கிக் கொண்டது. இவ் ஆணைக்குழுவானது யுத்த கால மீறல் தொடர்பாக தனது விசாரணையை மேற்கொண்டதுடன் அதன் இறுதி அறிக்கையை கடந்த நவம்பரில் அரசாங்கத்திடம் கையளித்தது.
அமெரிக்கா மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் பல இவ் ஆணைக்குழுவின் அறிக்கையை விமர்சித்ததுடன், இவ் ஆணைக்குழுவானது முழுமையான விசாரணையை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம்சாட்டின.
ஐ.நா வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கமானது எந்தவொரு கருத்துக்களையும் வெளியிடவில்லை. அத்துடன் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் இந்தியாவானது தனது அழுத்தங்களை மேற்கொள்ளவுமில்லை.
சிறிலங்கா மீது அதிக அழுத்தங்களை மேற்கொள்வதன் மூலம், சிறிலங்காத் தீவில் தற்போது செல்வாக்குச் செலுத்தி வரும் சீனாவின் நகர்வுகள் அதிகரிக்கலாம் எனவும், இதன் மூலம் சிறிலங்காத் தீவின் மீதான தனது செல்வாக்கை தான் இழந்துவிடுவேனோ எனவும் இந்தியா அச்சம் கொள்கின்றது.
தமிழ்ப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்களை வெளிக்கொண்டுவருவதில் அதி முக்கியம் கொடுத்துள்ள சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவானது, சிறிலங்கா அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல மீறல்களை குறிப்பாக, பொதுமக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகள் மீது எந்தவொரு தயவு தாட்சணியமுமின்றி செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமை உள்ளிட்ட பல முக்கிய மீறல்களை வெளிக்கொண்டு வருவதில் தவறிழைத்துள்ளதாக நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடந்த மாதம் அறிவித்தது.
யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் பெரும்பான்மை சிங்கள சமூகத்தின் மத்தியில் திரு.ராஜபக்ச மிகப் பிரபல்யம் பெற்ற சிங்கள ஆட்சியாளராக உள்ளார். ஆனால், சிறிலங்காவில் வாழும் நான்கு மில்லியன் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக சித்திரவதைகள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான பல மீறல்களை மேற்கொண்டு வருவதாலும், ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்வதாலும், ராஜபக்சவுக்கான நற்பெயருக்கு அனைத்துலக மட்டத்தில் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிறிலங்கா அதிபர் அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
சிறிலங்காவில் யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகளான நிலையிலும் கூட, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்கள் தற்போதும் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவானது ஹேக்கிலுள்ள அனைத்தலக குற்றவியல் நீதிமன்றின் உறுப்பு நாடாக இருக்கவில்லை என்பதால், நேரடியாக இந்நீதிமன்றம் சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்ய முடியாது. ஆகவே ஐ.நா பாதுகாப்புச் சபை மட்டுமே இந்நீதிமன்றுக்கு கட்டளையை வழங்க முடியும். இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள முன்மொழிவுக்கு அதிக ஆதரவு வாக்குகள் கிடைக்குமா என்பதை இன்னமும் கண்டறிய முடியவில்லை.
இந்தியாவானது காலாதி காலமாக சிறிலங்காவின் நலனில் அது எதிர்நோக்கும் பிரச்சினைகளில் தனது தலையீட்டைக் காண்பித்துள்ளது. 1980ல் தமிழர் உரிமைகள் நசுக்கப்பட்ட போது, இந்தியாவானது தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பயிற்சிகளை வழங்கி உதவியது. ஆனால் அதன் பின்னர் புலிகள் அமைப்புடன் போரிடுவதற்காக இந்திய அமைதி காக்கும் படையை சிறிலங்காவுக்கு அனுப்பிவைத்தது. அதன் பின்னர் 1991ல் இந்தியப் பிரதமராக கடமையாற்றிய ராஜீவ் காந்தி, தமிழ்ப் புலிகளால் கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment