Wednesday, March 21, 2012

அரசபடைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களை சிறிலங்கா மறைக்க முடியாது – அமெரிக்கா

eileenவிடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, சிறிலங்கா அரசின் கொடூரங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை நடத்த சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் தமது முயற்சிகளுக்கு முக்கியமானதொரு கூட்டாளியின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். 
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்துக்கு இந்தியா வழங்கியுள்ள ஆதரவு குறித்தே அவர்கள் இவ்வாறு கூறியதாக, அமெரிக்க ஊடகமான The Wall Street Journal குறிப்பிட்டுள்ளது. 

சிறிலங்கா தடுக்கும் முயற்சிகளை மேற்கொண்ட போதும், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தவாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஏற்றுக் கொள்ளத் தயாராகி வருவதாகவும், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் எலீன் டோனஹெ தெரிவித்துள்ளார்.
“இதை ஒரு அடையாள வாக்கெடுப்பாக நாம் கருதவில்லை.
இது நம்பகமான அடிகளை எடுத்து வைக்க சிறிலங்கா அரசை ஊக்குவிக்கும் அர்த்தமுள்ள நகர்வாக அமையும் என்றே பார்க்கிறோம்.
சிறிலங்கா அரசு நம்பகமான அடிகளை எடுத்து வைக்க தவறி விடுமோ என்று நாம் அச்சம் கொண்டுள்ளோம்.
தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், எந்தவொரு கொள்கை விடயத்திலும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா அரசை அது கட்டுப்படுத்தாது.
ஆனால் 40,000 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா நிபுணர்குழுவினால் கூறப்பட்டுள்ள போரின் இறுதிக் கட்டத்தில் அரசபடைகளால் நிகழ்த்தப்பட்ட மீறல்களை சிறிலங்கா மறைக்க முடியாது என்று வலியுறுத்துவதற்கான ஒரு வழியாக வொசிங்டன் இதனைக் கருதுகிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த மீறல்கள் குறித்த தீர்மானத்துக்கு இராஜதந்திர இணக்கப்பாட்டை கட்டியெழுப்புவதற்கு கடுமையாகப் போராட வேண்டியிருந்தது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.Posted by Nilavan on March 20th, 2012

No comments:

Post a Comment