மியான்மரிடம்
இருந்து சிறிலங்கா பாடம் கற்றுக் கொள்ள முடியும் என்று பிரான்சுக்கான
சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “2009ம் ஆண்டில் மனிதஉரிமைகள் நிலைமை காரணமாக மியான்மார் பல்வேறு அனைத்துலக அழுத்தங்களை சந்தித்தது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தில் அது தோல்வியடைந்தது.
ஜெனிவாவில் 2009 மே மாதம் சிறிலங்கா ஒரு தீர்மானத்தின் மீது வெற்றி பெற்ற பின்னர், அதேசபையில் மியான்மர் தோல்வியை சந்தித்தது.
அப்போது இந்தியா, சீனா, ரஸ்யா என்பன அதற்கு ஆதரவாக வாக்களித்தன.
ஆனால் இன்று அந்த நாட்டுக்கு எதிராக எவரும் இல்லை. ஏனென்றால் அது மாறி வருகிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து மியான்மர், தனது அயல்நாடுகளுடன், குறிப்பாக ஆசியான் நாடுகளுடன் இணைந்து தனது மனிதஉரிமைகள் நிலைமையை மேம்படுத்துவதற்காக பணியாற்றியது.
ஜனநாயக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதில் பிரமாண்டமான, நம்பவே முடியாதளவுக்கு முன்னேற்றத்தைக் காண்பித்தது.
அது சுதந்திரமுள்ள நாடாக மாறியதுடன், ஜனநாயகத்துக்காகப் போராடிய எதிர்க்கட்சித் தலைவி ஆங் சாங் சூகியையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்தது.
சக்திவாய்ந்த நாடுகளின் பொறியில் இருந்து இப்படித் தான் மியான்மர் வெளியே வந்தது.
இந்த வெற்றியால் மியான்மார் அடுத்த ஆண்டில் ஆசியான் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு வந்துள்ளது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் அது தான் முடிவாக இருக்கப் போவதில்லை.
தீர்மானத்தைக் கொண்டு வந்த நாடுகள் எதிர்காலத்தில் மேலும் அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
No comments:
Post a Comment