போர்க்குற்றங்கள்
தொடர்பாக நம்பகமான விசாரணைகளை நடத்தக் கோரும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின்
தீர்மானத்தின் போது நடுநிலை வகித்தது சரியான முடிவே என்று மலேசியா
கூறியுள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மலேசியா எதிர்க்கும் என்றே நம்பப்பட்டது.
ஆனால் இறுதியில் அது தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டது.
சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்காமல் மலேசியா நடுநிலை வகித்தது குறித்து நேற்று மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இதுதொடர்பாக பதிலளித்த பிரதி வெளிவிவகார அமைச்சர் றிச்சர்ட் றியொட்,
“முப்பது ஆண்டுகால மோதல்கள் பற்றிய அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு 3 மாதங்கள் போதாது. இதனை ஐ.நா தீர்மானம் வலியுறுத்துவது நியாயமற்றது.
சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளை ஒரு உள்நாட்டு விவகாரமாகவே மலேசியா மதிக்கிறது.
அதேவேளை, நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் குறித்து அனைத்துலக சமூகத்துக்கு தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு சிறிலங்கா அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தருஸ்மன் அறிக்கையின் படி, மோதல்கள் நிறைந்த நாட்டில் இனப்படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் சிறிலங்கா அரசினாலும் விடுதலைப் புலிகளாலும் போரின் இறுதிக்கட்டத்தில் மனிதஉரிமை மீறல்களும், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களும் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இதனை நல்லிணக்க ஆணைக்குழுவும் உறுதிசெய்துள்ளது.
மலேசியா இந்த விகாரத்தில் இரட்டைவேடம் போடவில்லை. ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது.
சிறிலங்கா தன்னை நிரூபித்துக் கொள்வதற்கு மலேசியா ஒரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது.
ஆனால், நல்லிணக்கத்தை உருவாக்கும் காலகட்டத்தில் அமைதியை உருவாக்கத் தவறினால், அனைத்துலக சமூகம் தலையிடுவதா இல்லையா என்று தீர்மானிப்பதற்காக ஒன்று கூடும்.“ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சரின் இந்தப் பதில் குறித்து பகாரான் ரக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர் அதிருப்தி வெளியிட்டார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அரசுக்கு ஆதரவளிப்பதாக கலாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
ஐபோ பாரத் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், நடுநிலை வகித்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டார்.
நடுநிலை வகித்த நாடுகளை மனிதஉரிமைகளின் பெறுமதி குறித்த மதிப்பிடப் பொருத்தமற்ற நாடுகள் என்றே ஒப்பிட முடியும் என்றும் அவர் கூறினார்.
பல பில்லியன் கணக்கான வர்த்தகத் தொடர்பினால் தான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தின் போது மலேசியா நடுநிலை வகித்ததா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்
No comments:
Post a Comment