இதுகுறித்து, இந்தியப் பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
“சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்புச்சபையுடன் இணைந்து, அந்தக் குற்றங்களை புரிந்தோரைக் கண்டறிய வேண்டும் எனவும், அவர்களைப் போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வலியுறுத்தியும் கடந்த ஆண்டு ஜூன் 14 மற்றும் 25-ம் நாட்களில் தங்களுக்கு கடிதங்களை எழுதினேன்.
மேலும், சிறிலங்கா முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் மறுகுடியமர்வு செய்யப்படவும், அவர்களுக்கு சுய மரியாதையும், சிங்களவர்களுக்கு இணையாக அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் அனைத்தும் வழங்கப்படும் வரை அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
இந்த நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனிதஉரிமை பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா இராணுவம் மனிதஉரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது.
சிறிலங்கா பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது சாதகமான முறையில் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கருதிக் கொண்டிருந்தேன்.
ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு எதிராகவும், சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என நம்புவதாக சிறிலங்காவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
மனிதஉரிமை மீறல் குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச்சில் நடைபெறுகிறது.
அமெரிக்கா கொண்டு வரவுள்ள இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்“ என்று இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை, திமுக தலைவர் மு.கருணாநிதி, மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவுனர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment