Wednesday, March 07, 2012

ஐ.நா கூட்டத் தொடர்!- இராஜதந்திரச் செயற்பாடுகளில் தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது!

சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைச் சபையிலும், பலலவேறு நாடுகளிலும் தொடர்ச்சியான இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புக்களில், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலல் தகவல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…
பெப்ரவரி 20ம் நாள் முதல் ஐ.நா மனித உரிமைச் சபையில் பல்வேறு நாட்டு இராஜதந்திரிகளுடன் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.
நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்க்குற்றம், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தினால் உருவாக்கப்பட்ட “We Accuse War Crimes and Genocide” எனும் கையேடு, ஐ.நா மனித உரிமைச் சபையில் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளுக்கு கையளிக்கப்பட்டிருப்பதோடு, ஐ.நா மனித உரிமைச் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகளுக்கு சேரும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதேவேளை, இக் கையேடு ஐ.நா மனித உரிமைச் சபையில் பங்கெடுத்திருக்கும் அனைத்து பிரதிநிதிகளின் கவனத்தை பெறும் வண்ணம் பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைச் சபையில் தொடர்சியான சந்திப்புக்களில் நா.த.அரசாங்க பிரதிநிதிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள தகவல்துறை அமைச்சக செய்திக்குறிப்பில், பல்வேறு நாடுகளிலும் வெளிநாட்டு அமைச்சுக்களுடனும், தூதரங்களுடனும் சந்திப்புக்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சத்தில் சமீபத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சகத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் Markus Löning மற்றும் செயலர் Felix Schwarz ஆகியோருடன், நா.த.அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்க்குற்றம், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் ஜேர்மனிய செயலர் வாசுகி தங்கராஜா ஆகியோருக்கும் இடையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
ஜேர்மனிய அரசாங்கம், உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் தொடர்பில் கொண்டிருக்கின்ற கரிசனை குறித்து குறிப்பிட்ட ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சகத்தின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை வேண்டுவதும், பாதிப்புக்களில் இருந்து காப்பதற்கான பொறிமுறையினை உருவாக்குவதிலுமே ஜேர்மன் அதிக முக்கியத்துவம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனிப்பதாக குறிப்பிட்ட ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சுப் பிரதிநிதிகள், தமிழர்களின் சனநாயக போராட்ட வழிமுறையை ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கனடாவிலும் நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் கனடியச் செயலர் நிமல் விநாயகமூர்த்தி அவர்கள் பல்வேறு நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.
இவ்வாறு ஐ.நா மனித உரிமைச் சபைக்கூட்டத் தொடரினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்சியான இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புக்களில் தொடர்சியாக ஈடுபட்டு வருவதாக தகவல்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment