Wednesday, March 07, 2012

சர்வதேசத்திடம் உண்மையான நீதியைக் கோரும் உலகத் தமிழர்கள் ! பிரதமர் வி.உருத்திரகுமாரன்

கொழும்பு சண்டே லீடருக்கு பத்திரிகைக்கு, ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரினை முன்னிறுத்தி, சர்வதேசத்திடம் உலகத் தமிழர்கள் கோரி நிற்கும் நீதி தொடர்பாக, செவ்வியொன்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் வழங்கியிருந்தார்.
2000 ஆண்டின் ஆரம்ப காலங்களில், விடுதலைப்புலிகளிடம் பல தோல்விகளைத் தழுவிய சிங்கள அரசாங்கம், சர்வதேச நாடுகள் மூலமாக சமாதானம் என்ற மாயமானை அனுப்பி, தமிழர்களை ஏமாற்றி, திரைமறைவில் போருக்கான ஆயத்தங்களைச்செய்திருந்ததென பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
கொடிய போருக்கு சாட்சியமில்லாமலிருக்க, சர்வதேச சமூகத்தொண்டு நிறுவனங்களை வலோற்காரமாக இலங்கைக்கு வெளியே தள்ளிவிட்டு, ஊடகங்களுக்குத் தடை விதித்துவிட்டு, மனிதாபிமான யுத்தம் என்று பெயர்வைத்து பாரிய இனவழிப்பு யுத்தம் ஒன்றை தமிழர்கள் மீது சிறிலங்கா அரசு கட்டவிழ்த்தது என குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவினர் இதனை விசாரித்தபோது, 40,000 மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும், வகைதொகையில்லாப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளர்கள்என்றும், இருப்பிடம் இழந்தவர்களுக்கு உணவும், போரில் காயப்பட்டவர்களுக்கு மருத்துவமும், வேண்டுமென்றே மறுக்கப்பட்டு இறக்கவிடப்பட்டமை கண்டறியப்பட்டது என ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர், சிறிலங்கா அரசாங்கத்தால் வெகு சமர்த்தியமாக சதி செய்யப்பட்டு, தம்மீது நடத்தி முடிக்க பட்ட இந்த இனவழிப்பை, சர்வதேச பொறிமுறை ஒன்றால் விசாரிக்கப்பட்டால் மட்டுமே, தங்களுக்கு உண்மையான நீதி கிடைக்கும் என தமிழர்கள் நம்புகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
தற்போது ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பரிசீலீக்கப்படும் பிரேரணை, தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமையவில்லை என்றும், அது தொடர்ந்து திருத்தப்படுவதால், இறுதி வடிவம் வலுவானதாக இருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
வெறும் கண்துடைப்புக்களும், அரசைக் காப்பாற்றும் கபட முயற்சிகளுமே, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைகுழுவும், இராணுவ நீதிமன்றங்களும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் இறுதிக்கட்ட விபரங்கள், ஐ.நா நிபுணர்கள் குழு தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தபடி, சிறிலங்காவின் அரசியல் சூழ்நிலையில் அதன் நீதித்துறையினரால் நம்பிக்கை தரத் தக்கபடியாக, செயற்ப்பட முடியாதென்பதை நிருபிக்கிறது என்று தெரிவத்துள்ளார்.
சர்வதேசப்பொறிமுறை உடனே அமைக்கப்படவேண்டும், இல்லையேல் அது தமிழருக்கு, தாமதப்படுத்தப்பட்ட நீதி தரமறுக்கபட்ட நீதியாகிவிடும் என்றும் எச்சரித்திருக்கின்றார்.
ஐ.நா.நிபுணர் குழு காட்டியிருப்பது போல் இறந்தவர்களின் தொகை 40,000 அல்ல, பல ஆதாரங்களின் வழியே இது உண்மையில், 146,000யும் தாண்டுகிறது. இந்த நிலையில், சிறிலங்காவின் சில இராணுவத்தினரை தண்டிப்பதோ, அல்லது சில தொகை மக்கள் இறந்ததாக ஒத்துக்கொள்ள முன்வருவதோ, சிங்கள அரசு தன்னை பாதுகாக்க முற்படும் ஒரு பேரமாகவே இது அமைகின்றதென பிரதமர் வி.உருத்திரகுமாரன்  தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

No comments:

Post a Comment