Friday, March 02, 2012

எமக்கான விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது; அனைத்துலக மக்களவை அழைப்பு!

பொங்கி அழவேண்டிய காலம் அல்ல,  இன்று பொங்கி எழவேண்டிய இடமே ஐ நா சபை முன்றலில் !!! 
எமக்கான விடுதலை எம் பலம் வாய்ந்த கைகளில் தான் இருக்கின்றது …
அனைத்துலக மக்களவை அழைப்பு!

புலம் பெயர் தமிழ் மக்கள் ஆகிய நாம்   முள்ளிவாய்க்காலில்   நடைபெற்ற தமிழின படுகொலைகளின் கவலைகளை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டோம். எமது  கடும் கோபம் அணையாத நெருப்பாகவே இருந்து வருகிறது.

ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவாகும் வேளையில்  ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் எவ்வித விட்டுக்கொடுப்புக்களுமன்றி எமது சுதந்திர தாகத்துடன் தமிழீழப் பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம்.  அவ் வகையில்,  நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நா சபையின் 19வது  மனித உரிமை கூட்டத்தொடரில் சிறீலங்கா இனவாத அரசுக்குப் பல்வேறு பக்கங்களாலும் பாரிய அழுத்தங்கள் எழும்புகின்றன. சிறீலங்காவின் வெளியுறவுத் தொடர்பு, சொந்த நலன்களின் அடிப்படையில் தொடர்ந்தாலும் பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் தமது அதிருப்திகளை  மெல்ல வெளியிட ஆரம்பிக்கின்றன .

எது எவ்வாறு இருப்பினும் எமக்கான விடுதலை எமது பலம் வாய்ந்த கைகளிலில் தான் இருக்கின்றது. ஆதலால் நாம் எம்மை பலப்படுத்தும் வகையில் எமது அரசியல் போராட்டத்தை வலுப்படுத்துவோம் .

கடந்த பெப்ரவரி 5 அன்று பெல்சியம், புருசல் நகரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இருந்து ஐ நா வை நோக்கி நீதிக்கான நடைபயணம் மேற்கொள்ளும் உறவுகள் இன்னும்  சில நாட்களில் தமது இலக்கை அடைய அயராது நடக்கின்றனர். நடைபயணத்தின் இறுதி நாளான மார்ச் 5 அன்று ஐ. நா சபை முன்றலில் மாபெரும் எழுச்சி நிகழ்வுக்கு அனைத்து ஐரோப்பிய தமிழர்களும்  தமது பயண ஒழுங்குகளை வேகமாக செய்துவருகின்றனர் .

எம்மை அழிக்க ஒன்று திரண்ட உலக நாடுகள் பல்லாயிரக்கனக்கான உயிர்களை எடுத்தபின்  இன்று எமக்கு  நீதி கோர மெல்ல முனைகின்றது.
நீதி கொடுப்போம்  எனும் மாயையை சில வல்லரசு நாடுகள்  உருவாக்கி இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போடும் நாடகத்தில் நாம் மயங்கி விடாமல் எமது  நீதியின் அடிப்படையில் எமது மக்கள் மீது சிங்கள இனவெறி அரசும் அத்தோடு அதற்கு தோள்கொடுத்த சில வல்லரசு நாடுகளும் மேற்கொண்ட,  மேற்கொள்ளும் இனவழிப்பை உலகிற்கு  மார்ச் 5 எடுத்துரைப்போம். ரத்தம் படிந்த கைகளில் இருந்து எமக்கு ஒருபோதும் உண்மையான நீதி கிடைக்க போவதில்லை. ஆதலால் எமது நீதியை நாமே நிலை நாட்ட வேண்டும்.

எமது உன்னதமான விடுதலைப் போராட்டத்திற்குத் தமது உயிர்களை அர்ப்பணித்த எமது உறவுகளின் தியாகங்களில் இருந்து எமது சக்தியையும் எமது தளராத உறுதியையும் எடுத்துக் கொள்வோம்.
மார்ச் 5 இல் நாம் அனைவரும் ஓங்கிக் குரல்கொடுப்போம். அதை  தொடர்ந்தும் ஓயாமல் உழைப்போம்.

இறுதி மூச்சு எமது உடலில் இருக்கும் வரை உறுதி  தளராமல்  தமிழீழம் என்றே உச்சரிக்கட்டும்.
அறிவாயுதம் எங்கள் கைகளில்...
இனிப் போர் புலம்பெயர் தேசத்தில்தான்....

மார்ச் 5 இல் ஐ. நா சபை முன்றலில் சந்திப்போம்.....
"ஒரு மனிதனின் இருப்பைவிட அவனின் செயற்பாடே வரலாற்றுச்சக்கரங்களை சுழற்றுகிறது" (தமிழீழ தேசியத்தலைவர்)
...அது வரை சிந்திப்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
அனைத்துலக மக்களவை -  செயலகம்
தொடர்புகட்கு: seyalakam.makkalavai@gmail.com

No comments:

Post a Comment