Monday, March 05, 2012

ஓங்கித்தட்டுவோம் உறவுகளே - உலுங்கட்டும் உலகின் மனசாட்சி : கருநாடகத் தமிழர் குரல்

வஞ்சகமும் துரோகமும் தோள்கொடுக்க சிங்களம் தன் வக்கிர கொடூரங்களை தமிழீழ மண்ணில் மட்டற்று கட்டற்று நிறைவேற்றி மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. நாசகார எதிர்ப்புரட்சி சக்திகள் முட்டுக்கொடுக்க சிங்களக் கோழையர்  போர் தர்மங்களை எல்லாம் புறந்தள்ளி  உலகம் தடை செய்த ரசாயன ஆயுதங்கள், கொத்துக்குண்டுகள்,  புடைசூழ அனாக்ரமங்களை நிகழ்த்தினர்.
இனப்படு கொலைகள் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டன. இந்தியச் சதியால் எங்களின் காவல் அரண்களான, எமது தமிழீழ ராணுவமான புலிகள்  எம் மண்ணில் இருந்து அகற்றப்பட்டுவிட்ட நிலையில்  இன்று இன அழிப்பு நின்று நிதானமாக  நடத்தப்பட்டு வருகிறது.


வஞ்சகமும் கொடூரங்களும் பெருந்துயரும் வரலாற்றின் பக்கங்கள் என ஆகிவிட்ட நிலையில் எம் உறவுகளை பச்சையாய் சிதைத்து பிழிந்தெடுத்த செங்குருதி நெஞ்சில் நெருப்பு நதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இதயம் வெந்து தணிகிறது.
கொடுந்துயர்ப்பாள்ளத்தாக்கில் தள்ளப்பட்டுவிட்ட இந்த இனக்கூட்டம் இனி எழுமோ? துளிர் விடுமோ? என விதி என்னும் கயவன் சர்வதேசம் என்னும் பாவனையில் எம்மை நோக்கினான். இந்த உலகில் எம்மைப்போல் வாழ்ந்தவரும் இல்லை வீழ்ந்தவரும் இல்லை.
சுதந்திரம் தான் எம் மூச்சு, வெறும் சுவாசமன்று. என “சுளீர்” என எவர்க்கும் உறைக்க உரைத்து எழுவோம்!!
எமக்கான பாதை எம் தேசியத் தலைமையினால் எப்போதோ  உருவாக்கப்பட்டு விட்டது. நாம்  பயணத்த்தில் இடையில் நின்றோம்.. களைத்தோம்..   என்றில்லாமல் இதோ... எங்கள் இளங்குருத்துக்கள்..  வேலுப்பிள்ளை மகேந்திரராஜா, லோகநாதன் மருதையா, யாகோமுத்து கிரேசியன்.. தோள் தட்டி புறப்பட்டனர்.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றிலிருந்து (பெல்ஜியத்திலிருந்து) ஐ.நா மன்றம் வரை (ஜெனீவா).. ஐந்து நாடுகள் ஆயிரத்து ஐநூறு மைல்கள் கால் நடையாய் புறப்பட்டார்கள்!!
உறை பனி கொட்டட்டும்... குளிர் எம்மை வதைக்கட்டும்… நடந்து நடந்து எம் பாதங்க்களில் வழியும் வெங்குருதியில் பனிமலைகள் உருகியோடட்டும்…

வெங்கொடுமை சாக்காடே எம் வீதி.கங்கையாய் காவிரியாய் ஜீவ நதியாய் கரை புரளுவது எம் செங்குருதி. ஏ உலகமே நீ எமக்குள் அமிழ்ந்து போவது உறுதி... என அவர்கள் இன்றோடு 28 நாட்களைக்கடந்து  நடக்கிறார்கள் அவர்கள் பின்னால் எம் சாதி சனம் ஒட்டு மொத்தமாய் உணர்வாய் செல்கிறது.
நீண்டதொரு துயர் இருட்டில் துள்ளியெழும் துளி மின்னல்.  இவர்கள் துரோகத்தையும் வஞ்சகத்தையும் சுட்டெரிக்க சிறகு விரிக்கும் அக்கினிக்குஞ்சுகள். உறைந்துவிட்டிருக்கும் எம் இதயங்களில் வெம்மைப்பால் வார்க்கும் நம்பிக்கை கரங்கள். ஐரோப்பிய குளிர் வானத்தில் அக்கினிகுஞ்சுகள் சிறகு விரித்தன ஐநா முன்றலில் நியாயங்களை கொலுவேற்றுவோம்.  ஓங்கித்தட்டுவோம் உறவுகளே ஐ.நா வின் நெடுங்கதவம் உடைபடட்டும் உலுங்கட்டும் உலகின் மனசாட்சி. தூள் தூளாகிறது துயர் இருட்டு.. துள்ளி  எழுகிறது துளி மின்னல்...அதன் உச்சியில் அதோ! அதோ!!  திசையென தேசமென சிலுங்கி ஒளிர்கிறது  “செந்தமிழ் ஈழம்”

ஐ.நா மன்றமே! இனப்படுகொலையை நின்று வேடிக்கை பார்த்த சர்வதேசமே!

தமிழினப் படுகொலை செய்த சிங்கள இனவாத அரசை கூண்டிலேற்றுங்கள்!!

சிங்களச் சிறைகளில் வதைபடும் எம் உறவுகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள்!!!

எம் தாய் மண்ணிலிருந்து தாயத்தில் இருந்து சிங்கள காடையர் இராணுவத்தை உடனடியாக வெளியேற்றுங்கள்!!!!

சுதந்திரத் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பினை நடத்துங்கள்!!!!!

எம் தமிழ் ஈழ மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கி அவர்கள்  தங்கள் சுதந்திர ஈழ தேசத்தை நிர்மாணிக்கும் உரிமையை உறுதி செய்யுங்கள் ...

என அதிர்வோம் இவ்வுலகு அதிர எழுவோம்.

இவண்
என்றென்றும் உங்கள் உணர்வில் கருநாடக தமிழர் சார்பில்
கருநாடகத்தமிழர் குரல்

No comments:

Post a Comment