ஐநா முன்றலில் நாளை சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் திரண்டுவரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
இலங்கைத்தீவில் இனிமேலும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் நிற்கதியாய் நிற்கும் தமிழ் இனத்திற்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஐநாவிடம் அறைகூவல் விடுப்பதற்காக நாளைய தினம் உலகத்தமிழினம்
ஒன்றுகூடுகின்ற ஐநா முன்றலுக்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளும் உணர்வுடன் அணிதிரண்டு வரவேண்டும் என்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு இன்று ( 04.03.12 ) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
கடந்த ஒரு மாத காலமாக நீதி கேட்டு நடந்த மூவரது நீதிக்கான நடைப்பயணம் நாளை ஐநா முன்றலில் முற்றுப்பெறுகிறது. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இன்னும் சுதந்திர தாகம் தீரவில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துச்சொல்லவும் பெருந்திரளான தமிழர்கள் ஒன்றுகூட உள்ளனர்.
நாம் அறிந்த வகையில் பிரான்ஸிலிருந்து புகையிரதத்திலும், யேர்மனியிலிருந்து பேரூந்துகளிலும், பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் மற்றும் பேரூந்துகளிலும், நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, நோர்வே மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பேரூந்துகளிலும் விமானங்களிலும் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் திரண்டுவர இருக்கின்றனர்.
தமிழின விடுதலைப்போருக்கும் தாயக செயற்ப்பாடுகளுக்கும் சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் வழங்கிய பேராதரவை வரலாறு என்றுமே மறந்து போகாது இந் நிலையில் நாளைய தினம் ஐநா சபைமுன்றலிற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் திரண்டு வருகைதர வேண்டும் என்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment