Wednesday, March 14, 2012

பாலச்சந்திரன் போரில் இறந்திருக்க கூடும்! சாதாரணமாக கூறுகின்றார் தூதுவர் பிரசாத்


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் போரில் இறந்து இருக்கக் கூடும், ஆனால் படுகொலை செய்யப்படவே இல்லை என்று தெரிவித்து உள்ளார் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம்.

இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்று குற்றம் சாட்டி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் புதிதாக வெளியிடப்பட்டு உள்ள இலங்கையின் கொலைக்களம் –

தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற வீடியோ குறித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்துக் கூறியபோதே இவ்வாறு கூறி உள்ளார்.

12 வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் படையினரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார் என்று இவ்வீடியோவில் காண்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் பாலச்சந்திரன் இறந்திருக்க கூடும், அதற்கான பதிவுகள் எம்மிடம் இல்லை, ஆனால் அவர் ஒருபோதும் படுகொலை செய்யப்பட்டு இருக்கவில்லை, இப்படுகொலை குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம், புலி உறுப்பினர்கள் அடங்கலாக 8000 பேர் இறுதி யுத்தத்தில் இறந்து இருக்கின்றனர், இவர்களில் ஒருவராக பாலச்சந்திரன் இருக்கக் கூடும், சனல் 4 திட்டமிட்ட வகையில் இவ்வீடியோவை ஆக்கி உள்ளது, இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக இவ்வீடியோவை ஆக்கி உள்ளது, இவ்வீடியோ உண்மைக்கு புறம்பானது, ஏற்றுக் கொள்ள முடியாதது, இவ்வீடியோவை உத்தியோகபூர்வமாக நாம் ஆட்சேபித்து உள்ளோம், சனல் 4 ஊடக ஒழுக்கத்துக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றது என்றார்.

No comments:

Post a Comment