Monday, April 02, 2012

'சமூக சிற்பிகள்' அமைப்பு பதிவேற்றிய கதைகள் - 03: இது பனை ஓலையில் பாய் பின்னி வாழ்ந்த சாந்தி கூறும் கதை

முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

[யுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார்.

இவர் தனது சிறுபராயத்தில், பனையோலைகளால் கூரை வேயப்பட்டு, நான்குபுறமும் பனைமட்டைகளால் சுத்தி வரியப்பட்ட குடிசை ஒன்றில் வாழ்ந்திருந்தார். இவரது இந்தக் குடிசையின் நிலம் களிமண்ணால் மெழுகப்பட்டிருந்ததுடன், வீட்டைச் சுற்றி களிமண்ணாலான மிகத் தாழ்வான சுவரும் அமைக்கப்பட்டிருந்தது. நச்சுப் பாம்புகள் வீட்டுக்குள் நுழையாமல் தடுப்பதற்காகவே இவ்வாறான தாழ்வான சுவர் அமைக்கபட்டிருந்தது. இந்த வீடானது இரு அறைகளையும் ஒரு விறாந்தையையும் கொண்டிருந்தது. சாந்தி இந்த வீட்டில் தான் பிறந்திருந்தார்.

பிட்டு, தோசை, இடியப்பம், பாலப்பம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை எவ்வாறு சமைப்பது என்பது தொடர்பாக சாந்தியின் தாயார் சாந்திக்கு கற்றுக் கொடுத்திருந்தார். சாந்தி வீட்டில் இரண்டாவது பிள்ளை. இவருக்கு ஆறு இளைய ஆண் சகோதரர்களும், ஒரு மூத்த பெண் சகோதரியும் இருந்தனர்.

பேருந்து சாரதியாக கொழும்பில் வேலை பார்த்த சாந்தியின் தகப்பனார் மாதத்தில் இரு தடவைகள் வீட்டுக்கு வருவார். சாந்திக்கு பதினொரு வயதாக இருந்த போது சாந்தியின் தகப்பனார் இறந்துவிட்டார். இதன் பின்னர் குடும்ப நிர்வாகத்தை இயக்குவதற்காக சாந்தியின் தாயார் பனை ஓலைகளில் எவ்வாறு பாய் பின்னுவது என்பது தொடர்பாக சாந்திக்கு கற்றுக் கொடுத்தார்.

யாழ் குடாநாட்டில் பனைமரங்கள் பரந்தளவில் வளர்ந்துள்ளன. இப்பனை மரத்தின் ஒவ்வொரு பாகங்களையும் உள்ளுர் மக்கள் பயன்படுத்திக் கொள்வர். அதாவது பனை மரத்திலிருந்து பெறப்படும் கள் குடிப்பதற்கு பயன்படுகின்றது. அதேபோன்று பனம் பழத்திலிருந்து பனங்காய் பணியாரம் தயாரிக்கப்படுகின்றது. இதைவிட பினாட்டு, பனங்கிழங்கு, ஓடியல் போன்றனவும் பனை மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. பனைமரத்தின் ஓலைகள் வீடுகள் வேய்வதற்கும், வேலிகள் கட்டுவதற்கும், பனை மரத்தின் அடிப்பாகம் கட்டடங்களுக்கான கூரைகள் அமைப்பதற்கும் பயன்படுகின்றன.

இராணுவ முன்னேற்றம் காரணமாக வன்னிப் பெருநிலப்பரப்பில் பல இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்த சாதாரண தமிழ் மக்களின் அனுபவங்களை சாந்தியின் கதை கூறிநிற்கிறது. அதாவது வன்னியில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையிலிருந்து தப்பிப் பிழைத்து வந்த மக்கள் கூறும் அனுபவப் பகிர்வுகளில் இங்கு கூறப்படும் சாந்தியின் அனுபவமும் ஒன்றாகும்.]
சாந்தி தான் பெற்றுக் கொண்ட அனுபவத்தை இவ்வாறு பகிர்கின்றார்:
நான் சிறுமியாக இருந்த போது, எனது தாயார் பனை ஓலைகளை வெட்டுவதற்காக மனிதர் ஒருவரைக் கூலிக்கு அமர்த்தியிருந்தார். இவ்வாறு வெட்டப்படும் பனை ஓலைகளை இம் மனிதர் மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு எமது வீட்டுக்கு எடுத்து வருவார். நாங்கள் பச்சை, சிவப்பு, ஊதா போன்ற நிறங்களிலான சாயங்களை கடைகளில் வாங்குவோம். பின்னர் இந்நிறச் சாயங்கள் கலந்த பனை ஓலைகளை ஊறவைப்போம். பின்னர் இவற்றை எமது வீட்டைச் சூழவிருந்த மணல்களில் பரவி காயவைப்போம். அதன் பின்னர் அவற்றின் மீது நானும் எனது தாயாரும் 'ஐவிரல்' 'மூவிரல்' போன்ற பெயர்களால் வடிவங்கள் போடுவோம். நானும் எனது தாயாரும் இப்போதும் கூட இந்தப் பெயர்களை பாய்களில் வடிவங்கள் போடுவதற்காக பயன்படுத்துகிறோம். நான் இளமையாக இருந்த போது மிளகாய், வெங்காயம் மற்றும் நீண்ட அவரை போன்றவற்றை எமது தோட்டத்தில் பயிரிட்டு அவற்றை சந்தையில் விற்றோம்.

1990 ல், அதாவது எனக்கு இருபத்து மூன்று வயதாக இருந்த போது, முதன் முறையாக நாங்கள் எமது சொந்த இடத்திலிருந்து இடம்பெயர்ந்தோம். மிகத் தாழ்வாகப் பறந்த உலங்குவானூர்தி ஒன்று எமது கிராமத்தை குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளத் தொடங்கியதால் கிராமத்தவர்கள் அனைவரும் தப்பியோடினோம். பின்னாளில் எனது கணவராக வந்த அந்த மனிதன் தனது சகோதரியின் மகனை காவிக் கொண்டு இடுப்பளவுக்கு ஆழமாக இருந்த அந்த நீரோடையின் ஊடாக நடந்து கொண்டிருந்தார். உலங்குவானூர்தி எம்மை நெருங்கிய போது, நாங்கள் உருமறைப்புக்காக எமது தலைகளுக்கு மேல் பனை ஓலைகளைப் பிடித்துக் கொண்டோம். அப்போது எனது கணவரின் சகோதரி இறந்து விட்டார். இதனால் உதவியின்றி தவித்த எனது கணவருக்கு அவரது சகோதரியின் மரணச்சடங்கையும் அவரின் 31 ம் நாள் நினைவு நாளையும் மேற்கொள்வதற்கு எனது குடும்பத்தவர்கள் உதவிபுரிந்தனர்.

பின்னாளில் எனது கணவராக வந்த இந்த மனிதர் எமது வீட்டுக்கு அருகிலேயே வசித்து வந்தார். அவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், புத்திசாலியாகவும் இருந்தார். நான் தோட்டத்தில் பாடுபட்டு உழைப்பதை அவதானித்த இவர் தனது 28 வது வயதில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். எந்தவொரு சீதனமும் இன்றி அவர் என்னைத் திருமணம் செய்ய முன்வந்தார். எனது அம்மா, இரு மாமாக்கள் மற்றும் எனது மைத்துனர்கள் எமது திருமணத்தை ஒழுங்குபடுத்தி நடாத்தி வைத்தனர். எனது தாயார் சமைப்பதற்கு கற்றுத் தந்திருந்தார். நான் திருமணம் செய்வதற்கு சில ஆண்டுகளின் முன்னரே எனது தாயார் போன்று நன்றாக சமைக்கத் தொடங்கினேன். எமது திருமணத்துக்கு உறவினர்கள் பலரும் வந்திருந்தனர். திருமண நாளில் முதலில் பாலுக்குள் வாழைப்பழம் ஒன்றை நாம் போட்டோம். பின்னர், சுவாமி அறைக்குள் வாழையிலை ஒன்றைப் போட்டு அதில் எல்லாக் கறிகளையும் சேர்த்து நான் எனது கணவருக்கும் அவர் எனக்கும் பரிமாறிக் கொண்டோம். இதன் பின்னர் நாம் மச்சான் மச்சாள் என்ற உறவுமுறையால் அழைக்கப்பட்டோம்.

1995 ல் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது இராணுவத்தினர் எமது இடங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். நாம் இருந்த இடத்தை நோக்கி அவர்கள் எறிகணைகளை வீசத் தொடங்கினர். அதனால் எல்லோரும் அங்கிருந்து தப்பியோடினோம். இந்த நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தின் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாவற்குழிப் பாலத்தின் மீது விமானக்குண்டுகளை வீசினர். இதனால் இதற்குள் பெருமளவான மக்கள் அகப்பட்டுக் கொண்டனர். எறிகணை மற்றும் வான்குண்டுத் தாக்குதல்களால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெருமளவான முதியோர்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் எமது மாமாவின் இடத்தை வந்தடைந்தோம். அங்கே நாங்கள் பனை ஓலையால் வீடொன்றை அமைத்து பத்து ஆண்டுகள் வரை தங்கியிருந்தோம்.
2004 ல், அதாவது யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, எமது திருமணம் நடந்த இடத்துக்கு பதினான்கு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திரும்பிச் சென்றோம். அப்போது அங்கு எவரும் குடியேறியிருக்கவில்லை. இதனால் அந்த இடம் காடு போன்று காட்சியளித்தது. இங்கிருந்த எமது வீடு முற்றாக அழிவடைந்திருந்தது. நாம் பகுதியளவில் பாதிப்படைந்திருந்த எமது மாமாவின் வீட்டில் தங்கியிருந்து கொண்டு எமது நிலத்தை துப்பரவாக்கி மீண்டும் வீடொன்றை அமைத்துக் கொண்டோம்.

திருமணம் செய்து பதினான்கு ஆண்டுகளின் பின்னர் நான் மகள் ஒன்றுக்கு தாயாகினேன். எமது மகள் பிறந்திருந்த போது நாம் மிகவும் மகிழ்வடைந்தோம். எனது கணவர் எப்போதும் கட்டிட வேலையோ அல்லது கூலி வேலையோ செய்து வருமானம் ஈட்டிக்கொள்வார். அல்லது உழவியந்திரங்களில் சீமெந்து மற்றும் மணலை ஏற்றும் வேலையிலும் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நாங்கள் பனங்கிழங்குகளை அவித்து அவற்றை விற்றும் சிறிது பணத்தை தேடிக்கொண்டோம்.

எமது மகளின் முதலாவது பிறந்த நாளன்று ஏற்கனவே வைத்த நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்வதற்காக பூநகரி நாகதம்பிரான் ஆலயத்துக்கு சென்று கற்பூரச் சட்டி எடுத்து எமது நன்றிக்கடனைத் தீர்த்துக் கொண்டோம். அதாவது நாம் பல ஆண்டுகளாக பிள்ளைப் பாக்கியம் அற்று வேதனைப்பட்ட போது இவ்வாறானதொரு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதாக எண்ணியிருந்தோம்.

யுத்த நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு இரு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் எமது கிராமத்தில் அச்சம் நிலவ ஆரம்பித்ததால், நாம் மீண்டும் பூநகரியில் சென்று வாழத் தொடங்கினோம். அங்கே ஒரு ஆண்டு காலம் தங்கியிருந்ததன் பின்னர் மீண்டும் இடப் பெயர்வு. 2006 ல் பளையில் நிலைகொண்டிருந்த சிறிலங்காப் படையினர் பூநகரி நோக்கி எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங்கினர். இதனால் பூநகரியை விட்டு எல்லோரும் இடம்பெயரத் தொடங்கினர். [ ஞாயிற்றுக்கிழமை, 01 ஏப்ரல் 2012, 07:12 GMT ] [ நித்தியபாரதி ]


No comments:

Post a Comment